Showing posts with label மற்றவை. Show all posts
Showing posts with label மற்றவை. Show all posts

Wednesday, April 19, 2017

ஹெல்த் கேர் பத்திரிக்கையில் என்னுடைய கதம்ப பொரியல் ரெசிபி !

   


ஏப்ரல் 2017 ஹெல்த் கேர் மாத இதழ் பத்திரிக்கையில் என்னுடைய கதம்ப பொரியல் ரெசிபி வெளி வந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் உங்கள் அனைவரிடம் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த ஆறு  மாதங்களாக  என்னுடைய ரெசிபிகள் ஹெல்த் கேர் பத்திரிக்கையில் வந்து கொண்டிருக்கிறது.  கதம்ப பொரியல் ஆறாவது ரெசிபி ஆகும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி
சாரதா 

Tuesday, February 7, 2017

ஹெல்த் கேர் பத்திரிக்கையில் என்னுடைய சுரைக்காய் அடை ரெசிபி !

                                
பிப்ரவரி 2017 ஹெல்த் கேர் மாத இதழ் பத்திரிக்கையில் என்னுடைய சுரைக்காய் அடை ரெசிபி வெளி வந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அனைவரிடம் தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி
சாரதா
                                                                                                                                                                                          




Monday, January 9, 2017

ஹெல்த் கேர் பத்திரிகையில் மீண்டும் என்னுடைய ரெசிபி !



ஜனவரி 2017 ஹெல்த் கேர் மாத இதழ் பத்திரிக்கையில் என்னுடைய வெள்ளை அவல் புட்டு ரெசிபி வெளி வந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் உங்கள் அனைவரிடம் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த மூன்று மாதங்களாக என்னுடைய ரெசிபிகள் ஹெல்த் கேர் பத்திரிக்கையில் வந்து கொண்டிருக்கிறது. நவம்பர் மாத பத்திரிக்கையில் இட்லி மஞ்சூரியனும், டிசம்பர்  மாத பத்திரிக்கையில் வீட்டில் பனீர் தயாரிக்கும் முறை ரெசிபியும் வந்துள்ளது.

நன்றி
சாரதா



Monday, November 7, 2016

ஹெல்த் கேர் பத்திரிகையில் என்னுடைய ரெசிபி !


நவம்பர் 2016 ஹெல்த் கேர் மாத இதழ் பத்திரிக்கையில் என்னுடைய இட்லி மஞ்சூரியன் ரெசிபி வெளி வந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

Tuesday, November 24, 2015

திருக்கார்த்திகை தீபம்


திருக்கார்த்திகை தீபம் என்பது  கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி திதியும் கார்த்திகை நட்சத்திரமும் கூடிய திருக்கார்த்திகை நன்னாளில் கோவில்களிலும், வீடுகளிலும் இடம்  பெறும் சிறப்பான தீபத்திருநாளாகும்.

தமிழகத்தில் உள்ள எல்லா  ஆலயங்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் செயப்படுகிறது. திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் 10 நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. நிறைவு நாள் விழாவாக பரணி தீபம் ஏற்படும் போது மலை உச்சியிலிருக்கும் அண்ணாமலையாருக்கு கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது.

ஏழு அடி உயரம் உள்ள செப்பு கொப்பரையில் 3000 கிலோ நெய் ஊற்றி 1000 மீட்டர் கடா துணியால் செய்த திரியில் இந்த ஜோதி ஏற்றப்படுகிறது.                 

சிவன் கோவில்களில் பனை ஓலை கொண்டு கோபுர வடிவில் செய்து சொக்கப்பனை கொளுத்துவார்கள். அதில் தெரியும் ஜோதியை தரிசனம் செய்வதால் நன்மைகள் கிடைக்கும்.

தீபத் திருநாளில் கோவில்கள் தவிர இல்லங்களிலும் தீபத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தீபத்திருநாள் அன்று வீட்டை நன்கு சுத்தப்படுத்த வேண்டும். பூஜை அறையையும் சுத்தப்படுத்தி சுவாமி படங்களையும் நன்கு துடைத்து சந்தணம், குங்குமம் வைத்து பூச்சரம் போட்டு அலங்கரிக்க வேண்டும்.

வீட்டில் விளக்கு கிழக்கு திசை நோக்கி இருக்க வேண்டும். மாலையில் 6 மணிக்கு பூஜை அறை, மற்றும் எல்லா இடங்களிலும் அகல் விளக்குகளை ஏற்றி வைக்க வேண்டும். பார்ப்பதற்கு ஜெக  ஜோதியாக காட்சி அளிக்கும்.
                                                                         
இந்த நல்ல நாளில் கார்த்திகை கொழுக்கட்டை, கார்த்திகைப் பொரி செய்து கடவுளுக்கு படைத்து சகல நலமும் பெறுவோம். எல்லோருக்கும் திருக்கார்த்திகை வாழ்த்துக்கள் !!
                                                                                                                                          
நன்றி
சாரதா

எனது கார்த்திகை கொழுக்கட்டை பதிவை பார்க்க இங்கே கிளிக் பண்ணவும்.

Sunday, November 8, 2015

தீபாவளி பண்டிகை



இந்த வருடம் தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 10 ஆம் தேதி வர இருக்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் பண்டிகை ஆகும்.

சிறுவர்கள் மத்தாப்பு கொளுத்தியும், வெடிகள் வெடித்தும் மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாடுவார்கள்.அணைவர் வீட்டிலும் இனிப்பு வகைகள், கார வகைகள் எல்லாம் செய்து தீபாவளி பண்டிகையை அசத்துவார்கள். அ தான் செய்த தீபாவளி பலகாரங்களை உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுத்து மகிழ்வார்கள்.

இந்த நல்ல நாளில் உங்கள் அனைவருக்கும் என்னுடைய தீபாவளி நல் வாழ்த்துக்கள் !!!

தீபாவளி ஸ்பெஷல் பலகாரங்கள் -

  1. திருநெல்வேலி ( கோதுமை ) அல்வா 
  2. அசோகா அல்வா 
  3. கேரட் அல்வா 
  4. ரவா கேசரி 
  5. சேமியா கேசரி 
  6. பாசிப்பருப்பு உருண்டை 
  7. சுசியம் 
  8. முந்திரிக்கொத்து 
  9. மைதா போண்டா 
  10. கோதுமை அப்பம் 
  11. ரவா லட்டு 
  12. பொட்டுக்கடலை லட்டு 
  13. ஓட்ஸ் லட்டு 
  14. அதிரசம் 
  15. மைதா பிஸ்கட் 
  16. தேன்குழல் முறுக்கு 
  17. சீடை 
  18. மெது பக்கோடா 
  19. முள்ளு முறுக்கு 
  20. வாழைக்காய் பஜ்ஜி 
  21. உளுந்து வடை 
  22. ஆமவடை 
  23. பட்டாணி பருப்பு வடை 
  24. நெய் கடலை 
  25. காராப்பூந்தி 

Wednesday, October 21, 2015

சரஸ்வதி பூஜை / Sarawathi Pooja


தசராவின் ஒன்பதாவது நாளான இன்று சரஸ்வதி பூஜை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சரஸ்வதி பூஜை அன்று வீடுகளிலும், அலுவலங்களிலும் பூஜைகள் செய்து அன்னை சரஸ்வதியை வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளோம்.

சரஸ்வதியை வழிபடுவதற்கு முன்பு பூஜை செய்யும் இடத்தை நன்கு சுத்தப்படுத்த வேண்டும். சரஸ்வதியின் படத்தையும் சுத்தப்படுத்தி சந்தணம், குங்குமம் வைத்து பூக்களால் அலங்கரிக்க வேண்டும்.

அன்னை சரஸ்வதியின் பார்வையில் புத்தகங்களை வைத்து அதன் முன் வாழை இலையை விரித்து சரஸ்வதிக்கு பிடித்தமான சர்க்கரைப்பொங்கல், பூம்பருப்பு, புளியோதரை வைத்து அன்னையை வழிபட வேண்டும்.

தசரா எங்கள் ஊரில் மிகவும் பிரபலமான பண்டிகை ஆகும். இங்கு 12 அம்மன் கோவில்கள் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு பூஜையும் நடக்கும். சில வீடுகளில் கொலு வைத்திருப்பார்கள்.
கொலு பார்க்க வருபவர்களுக்கு சுண்டல் வகைகள், சர்க்கரைப்பொங்கல் கொடுத்து மகிழ்வார்கள். 10 நாட்களும் கோவில்களில்  பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.

சரஸ்வதி பூஜை அன்று எல்லா அம்மனுக்கும் வெள்ளை நிற ஆடையில் அலங்காரம் செய்திருப்பார்கள். 23 ஆம் தேதி மாலையில் 12 சப்பரங்களும் பாளையங்கோட்டை மார்க்கெட் மைதானத்தில் வந்து நிற்கும். குழந்தைகளை மகிழ்விக்க ராட்டினங்கள், கடை வீதிகள் எல்லாம் இருக்கும்.
நாமும் சரஸ்வதி பூஜையை சிறப்பாக கொண்டாடுவோம். உங்கள் அணைவருக்கும் என்னுடைய சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள் !!

நன்றி
சாரதா 

Friday, October 2, 2015

காந்தி ஜெயந்தி / Gandhi Jeyanthi



காந்தி பிறந்த நாளான இன்று காந்தி ஜெயந்தி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

                                         மகாத்மா காந்தி பற்றி ஒரு சிறிய பதிவு

தேசப்பிதா என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி 1869 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் என்ற இடத்தில் கரம்சந்த் காந்திக்கும் புத்திலிபாய்க்கும் மகனாக பிறந்தார்.

பள்ளியில் படிக்கும் போதே நேர்மையான மாணவனாக விளங்கினார். தனது 13 வது வயதில் கஸ்தூரி பாயை மணந்து கொண்டார். தன்னுடைய 18 ஆம் வயதில் பாரிஸ்டர் எனப்படும் வழக்கறிஞர் கல்விக்காக இங்கிலாந்து சென்றார். வழக்கறிஞர் கல்வியை வெற்றிகரமாக முடித்து பாரதம் திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம் வழக்கறிஞராக பணியாற்றினார்.

1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஆங்கில அரசுக்கு எதிராக ஆகஸ்ட் புரட்சி என்று அழைக்கப்படும் வெள்ளையனே வெளியேறு என்ற இயக்கத்தை தொடங்கினார். அவரது மனஉறுதியை கண்டு ஆங்கில அரசு திகைத்தது. இறுதியில் காந்தியின் இடைவிடாத போராட்டத்தால் 1947 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி இந்தியாவில் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலங்கள், நிறுவனங்கள் எல்லாவற்றுக்கும் தேசிய விடுமுறை தினமாக அறிவித்துள்ளது.

காந்தியின் அறவழி சென்று நாமும் அவரை தலை வணங்கி இந்தியாவை மேலும் சிறப்படைய செய்வோம் !!!

நன்றி
சாரதா

Tuesday, September 15, 2015

விநாயகர் சதூர்த்தி


உங்கள் அணைவருக்கும்  என்னுடைய விநாயகர் சதூர்த்தி வாழ்த்துக்கள் !

விநாயகர் சதூர்த்தி இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி வர இருக்கிறது.

                                           விநாயகர் துதி

பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் கோலஞ்செய்
துங்க கரி முகத்துத் தூமணியே நீ எனக்கு
சங்கத்தமிழ் மூன்றும் தா !

விநாயகர் இந்துக்களின் முழு முதற் கடவுளாக விளங்குகிறார். யானைத்தலையும், பெரிய வயிறும் , மூஞ்சூரு வாகனமும் அவரது சிறப்பான அம்சங்களாகும்.

விநாயகருக்கு பிள்ளையார், கணபதி என்ற பெயரும் உண்டு. விநாயகர் மிகவும் எளிமையான கடவுள் ஆவார். விநாயகரை மரத்தடி முதல் மணி மண்டபம் வரை எங்கும் காணலாம்.

எப்போதும் எதையும் தொடங்கும் முன் பிள்ளையாரை வழிபட்ட பிறகே தொடங்குவது நம்முடைய வழக்கமாக இருந்து வருகிறது. விநாயகர் சதூர்த்தி அன்று 7 பிள்ளையார் கோவிலுக்கு சென்று வந்தால் நல்லது சொல்வார்கள்.

பிள்ளையாருக்கு மோதக கொழுக்கட்டை, சுண்டல், கோதுமை அப்பம் மிகவும் பிடிக்கும். எனவே இந்த நல்ல நாளில் பிள்ளையாருக்கு பிடித்ததை நாம் வீட்டில் செய்து அவருக்கு படைத்து நாம் விநாயகரை வழி படுவோம்.

விநாயகர் சதூர்த்தி ஸ்பெஷல் -

  1. மோதக கொழுக்கட்டை 
  2. கொண்டைக்கடலை சுண்டல் 
  3. கடலைப்பருப்பு சுண்டல் 
  4. பாசிப்பயறு சுண்டல் 
  5. வேர்க்கடலை சுண்டல் 
  6. கோதுமை அப்பம் 

Sunday, August 2, 2015

காலம் பொன்னானது / Time is Gold


காலத்தின் அருமையை  நாம் எவ்வாறு உணர்ந்து  செயல் படுகிறோம் என்பது பற்றி ஒரு சிறிய பதிவு உங்கள் அணைவரிடமும் பகிர்ந்து கொள்கிறேன்.

நாம் அனைவருக்கும் கல்வி, செல்வம், வீரம், ஆரோக்கியம் எல்லாவற்றிலும் வேறுபாடு இருக்கும். ஆனால் காலம் என்பது எல்லோருக்கும் பொதுவானது.

 காலம் பொன்னானது கடமை கண் போன்றது என்ற பழமொழியும் உண்டு. காலத்தின் அருமையை  உணர்ந்து நாம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும்.

மாணவர்கள்  இளமைப்பருவத்தில் தொலைத்த கல்வியை முதுமை பருவத்தில் தேடுவது மிகவும் கடினமாகும். எனவே மாணவர்கள் காலத்தின் அருமையை உணர்ந்து சரியான நேரத்தில் கல்வி கற்க வேண்டும்.

நேரத்தை வீணாக்குவது, சோம்பல் படுவது, நேரத்தை தள்ளி போடுவது போன்றவற்றை தவிர்க்க பழகி கொள்ள வேண்டும். இன்று செய்ய வேண்டியதை நாளைக்கு என்று தள்ளி போடாமல் இன்றே செய்து முடிக்க பழகி கொள்ள வேண்டும்.

தேசப்பிதா என்று அழைக்கப்படும் காந்திஜி காலம் நேரம் பார்க்காமல் நாட்டின் சுதந்ததிரத்துக்காக அயராது பாடு பட்டர். எளிமையை விரும்பிய அவரே நேரத்தை திட்டமிட்டு செயல் பட வேண்டும் என்று நினைத்து அந்த காலத்தில் ஆடம்பரமாக கருதப்பட்ட கைக்கடிகாரத்தை இடுப்பில் கட்டி இருந்தார்.

                                                                            

இப்போது பெண்கள்  சுலபமாக வேலை செய்வதற்கு காஸ் ஸ்டவ், குக்கர், மிக்ஸ்சி, கிரைண்டர் என்று வந்த படியால் நேரத்தை நிறைய மிச்சப்படுத்தலாம்.

அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்களுக்கும் கணினி, தகவல் தொடர்புக்கு இ மெயில் போன்றவை வந்து விட்ட படியால் நேரம் நிறைய மிச்சமாகிறது. இது போல பல பொருள்கள் நமது நேரத்தை மிச்சப்படுத்தும் போது நாம் நமது நேரத்தை சரியாக நிர்வாகம் செய்தால் வாழ்வில் வெற்றி அடையலாம்.

சில நேரங்களில் நாம் வைத்த பொருள்களை நாமே தேடும் நிலைமையும் உருவாகும். இதனால் நமது நேரம் தான் வீணாகிறது. எனவே எந்த ஒரு பொருளையும் ஒரே இடத்தில் வைத்து எடுக்க பழகி கொள்ள வேண்டும்.

நாம் தினமும் செய்யும் வேலைகளுக்கு, குடும்பத்திற்கு, நண்பர்களுக்கு, தொழிலுக்கு என்று நேரத்தை பகிர்ந்து காலத்தை  உணர்ந்து வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ பழகி கொள்வோம்.

நன்றி
சாரதா

Wednesday, July 22, 2015

ஆடி மாதத்தின் சிறப்புகள் / Aadi Month Special



ஆடி மாதத்தின் சிறப்பை பற்றி ஒரு சிறிய பதிவு -

தமிழ் மாதங்கள் 12 ஆகும். ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. சில மாதங்களுக்கு பழமொழியும் உண்டு. ஆடி மாதத்திற்கு ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழி இருக்கிறது.

இந்த வருடம் ஜூலை மாதம் 17 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிறந்துள்ளது. ஆடி மாதத்தில் சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பயணமாவதாக சொல்லப்படுகிறது. காற்றும், மழையும் அதிகமாக இருக்கும்.
ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் மிகவும் சிறப்பு வாய்ந்ததது.
ஆடி செவ்வாய் கிழமைகளில் அம்மனை வழிபட்டு வந்தால் பெண்களின் மாங்கல்ய பலம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது.
                                                                                                                         
ஆடி மாதம் என்றாலே அம்மன் கோவில்களில் திருவிழாவும், கூழ் ஊற்றுதலும், தீ மிதித்தலும் என்று களை கட்டும்.

ஆடி அமாவாசையில் குடும்பத்தின் முதியோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டால் நமக்கு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையும் இருந்து வருகிறது.

ஆடி 18 ஆம் தேதி ஆடிப்ருக்கு விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தண்ணீர் அதிகமாக வரும் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஆடித்தபசு விழா எல்லா சிறப்புகளுக்கும் சிறப்பு சேர்க்கும் விழாவாக கொண்டாடப்படுகிறது. ஆடித்தபசு அன்று கோமதி அம்மன் கோவிலில் கூட்டம் அதிகமாக இருக்கும்.

ஆடி மாதத்தில் மற்றொரு சிறப்பான செய்தி ஜவுளிக்கடைகளில் விற்பனை செய்யும் ஆடித்தள்ளுபடி ஆகும். எல்லா ஜவுளிக்கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். புடவைகள், சுடிதார்கள் என்று எல்லாவற்றுக்கும் விலையில் தள்ளுபடி செய்து கொடுப்பார்கள்.
                           
இது பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுக்கும். குடும்பத்தினருடன், உறவினர்களுடன், தோழிகளுடன் என்று கடைகளுக்கு சென்று வேண்டியதை வாங்கி வருவார்கள்.

இவ்வாறாக ஆடி மாத விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

நன்றி
சாரதா 

Tuesday, June 30, 2015

நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டம்


திருநெல்வேலியில் ஆண்டு தோறும் நடைபெறும் திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவில் தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு நெல்லையப்பர் கோவிலுக்கு 511 வது தேரோட்டமாகும்.                                                                                 
                                                                                             
ஆனித் தேரோட்டம் ஜூன் 22 ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் ஆரம்பம் ஆனது. காந்திமதி அம்பாளுக்கு அதிகாலை 6 மணிக்கு அபிஷேகம், மற்றும் சிறப்பு பூஜைகள் நடை பெற்றது.

இதை தொடர்ந்து நந்தி முன்பு உள்ள பெரிய கொடி மரத்தில் கோவில் மந்திரங்கள் முழங்க கொடி ஏற்றப்பட்டது. அங்கு கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் சிவனே போற்றி, இறைவா போற்றி என்று பக்தி கோஷங்களை பாடினார்கள். தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாரதனைகள் நடந்தது.

23 ஆம் தேதி காலை 8  மணிக்கு அம்பாள் சப்பரத்தில் எழுந்த்தருளி வீதி உலா வந்தார். 24 ஆம் தேதி காலை 8 மணிக்கு அம்பாள் வெள்ளி கமல வாகனத்தில் வீதி உலா வந்தார்.

25 ஆம் தேதி காலை 8 மணிக்கு அம்பாள் வெள்ளி காம தேனு வாகனத்தில் உலா வந்தார். 26 ஆம் தேதி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனங்களில் வீதி உலா வந்தார்.

27 ஆம் தேதி காலை 8 மணிக்கு அம்பாள் வெள்ளி சப்பரத்தில் வீதி உலா வந்தார். 28 ஆம் தேதி காலை 8 மணிக்கு அம்பாள் முத்துப்பல்லக்கில் வீதி உலா வந்தார்.

29 ஆம் தேதி காலை 7 மணிக்கு நடராஜ பெருமாள் வெள்ளை சாத்தி எழுந்த்தருளல், காலை 8 மணிக்கு  நடராஜ பெருமாள் பச்சை எழுந்த்தருளல் நிகழ்ச்சியும் நடந்தது. இரவு 10 மணிக்கு அம்பாள் தங்கக்கிளி வாகனத்தில் வீதி உலா வந்தார்.

30 ஆம் தேதியான இன்று  காந்திமதி அம்பாள் திருத்தேரில் கம்பீரமாக அமர்ந்து வர பக்த்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.

இன்று திருநெல்வேலி, பாளையங்கோட்டை முதலான பகுதிகளுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. எனவே குடும்பத்துடன் வந்து ஆர்வத்துடனும் பக்தியுடனும் கலந்து கொண்டு தேரோட்டத்தை கண்டு களித்தனர்.

இன்று நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வருக்கு என்று 5 தேர்கள் இழுக்கப்படும்.

ஒவ்வொரு நாளும் இரவு 8 மணிக்கு  திருமதி காயத்ரி கிரிசின், திரு ஞானசம்பந்தம், திருமதி ஜனனி, பாம்பே சாரதா, பால சுந்தரம், வீரமணி, சகோதரிகள் சுபலட்சுமி, சுவர்ணலதா ஆகியோரின் கச்சேரி நடந்தது.

இன்று  நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் இனிதே முடிந்தது.

நன்றி
சாரதா

Monday, June 1, 2015

வைகாசி விசாகம்

                                                                                

இன்று வைகாசி விசாகம். முருகனுக்குரிய திருவிழாவாகும்.

முருகன் சைவக்கடவுளான சிவன், பார்வதிக்கு மகனாவார். முருகனுக்கு சரவணன், கார்த்திகேயன், செந்தில், சுப்பிரமணியன் என்று பல பெயர்கள் உண்டு. இவருக்கு கணபதி அண்ணனாக அறியபடுவார்.

வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தை வைகாசி விசாகமாக கொண்டாடப்படுகிறது. வைகாசி விசாகம் என்பது முருகக்கடவுள் அவதாரம் எடுத்த நாளாகும். சிவனிடமிருந்து புறப்பட்ட தீப்பொறி ஓன்று ஆறு பகுதிகளாக சரவணப்பொய்கையில் விழுந்து ஆறு குழந்தைகளாக மாறியது. கார்த்திகைப்பெண்கள் ஆறு பேர் வளர்த்து வந்தார்கள். பிறகு பார்வதி ஒரு கார்த்திகைத் திருநாளில் ஆறு குழந்தைகளையும் ஓன்று சேர்த்து ஆறுமுகமாக்கினார். ஆறு முகங்களைப் பெற்ற முருகன் ஆறுமுகமானார். வைகாசியில் வரக்கூடிய விசாக நட்சத்திரத்தில் முருகக்கடவுளும் ஆறு முகங்களாக காட்சி அளிப்பார் என்று சொல்லப்படுகிறது.

வைகாசி விசாகம் அன்று எல்லா ஊர்களிலும் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடை பெறும். அன்று பக்த்தர்களின் கூட்டமும் அதிகமாக இருக்கும்.

அறுபடை வீடுகளான திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலையில் உள்ள முருகன் கோவில்களில் பக்தர்களின் கூட்டமும், சிறப்பு வழிபாடும் கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

திருச்செந்தூர் - அரசன் சூரபத்மனோடு போரிட்டு வென்று வெற்றி வாகை சூடிய திருத்தலமாகும்.

திருப்பரங்குன்றம் - சூரபத்மனை போரில் வென்ற பின் இந்திரன் மகளான தெய்வானையை மணந்த திருத்தலமாகும்.

பழனி - மாங்கனிக்காக அண்ணன் கணபதியோடு போட்டிபோட்டு  தோற்ற கோபத்தில் தண்டாயுதபாணியாக நின்ற திருத்தலமாகும்.

திருத்தணி - சூரனை வென்றபின் கோபம் தணிந்து குறவர் மகள் வள்ளியை மணந்த திருத்தலமாகும்.

சுவாமி மலை - தன்னுடைய தந்தை சிவனுக்கே பாடம் கற்பித்த திருத்தலமாகும்.

பழமுதிர்சோலை - ஒளவைக்கு பழம் உதிர்த்து வள்ளி, தெய்வானையோடு காட்சி தரும் திருத்தலமாகும்.                                                                                                                                                                                                             
இவ்வாறாக அறுபடைவீடுகளின் சிறப்பு பற்றி சொல்லப்படுகிறது.

எங்கள் ஊரான பாளையங்கோட்டையில் உள்ள தாமிரபரணி ஆற்றின் கரைப் பகுதியில் குறுக்குத்துறை முருகன் கோவிலில் வைகாசி விசாகம் சிறப்பாக கொண்டாடப்படும். தாமிரபரணி தண்ணீர் முருகனின் பாதம் பட்டு சிலிர்ப்புடன் சலசலத்து செல்வதாக சொல்லப்படுகிறது.

திருச்செந்தூர் முருகன் கோவில் தோன்றிய காலத்திலேயே குறுக்குத்துறை முருகன் கோவிலும் தோன்றியுள்ளது. ஒரே மாதிரியான இரண்டு முருகன் சிலைகளை உருவாக்கி ஒரு சிலையை திருச்செந்துரிலும், மற்றொன்றை குறுக்குத்துறையிலும் வைத்து வழிபட்டார்கள்.

குறுக்குத்துறையில் உள்ள பாறையில் முருகன் சிலை செய்யப்பட்டு திருச்செந்துருக்கு சென்றதால் குறுக்குத்துறை முருகன் கோவிலை திருச்செந்துரின் தாய் வீடாக கருதப்படுகிறது.

கோவிலுக்கு செல்லும் மக்கள் கட்டு சாதம் எடுத்துக்கொண்டு கிளம்புவார்கள்.கோவிலில் முருகனை தரிசித்து கட்டு சாதத்தை கோவில் பிரகாரத்தில் உட்கார்ந்து சாப்பிட்டு விட்டு மாலையில் தான் வீடு திரும்புவார்கள்.

இப்படியாக எல்லா ஊர்களிலும் உள்ள முருகன் கோவில்களில் வைகாசி விசாகம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

Sunday, May 10, 2015

அன்னையர் தினம் / Mother's Day


உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்னையர் தின வாழ்த்துக்கள் ! இன்று மே 10  ஆம் தேதி அன்னையர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.


இந்த பூமியில் நானும்  அவதாரம் எடுக்க
துணையாக  இருந்தவளே !

பத்து மாதங்கள்  என்னை
கருவறையில் சுமந்தவளே !

பசியால் நீ வாடும் பொழுதும்
நான் பசி அறியாமல் செய்தவளே !

உன்னை நான் என்னவென்று சொல்வேன்
நீ தெய்வம் என்று சொன்னால் கூட தகும் !

நீ தெய்வத்துக்கும்  மேலேதான் என் மனதில் !

தாயிற் சிறந்த கோவிலுமில்லை என்ற வரிகளுக்கு ஏற்ற படி ஒரு பெண் சகோதரியாக, தாரமாக, மகளாக, தோழியாக, பாட்டியாக என்று எத்தனையோ பாத்திரங்களில் வலம் வந்தாலும் அன்னை என்ற பாத்திரம் தான் முதல் இடத்தை வகிக்கிறது.

எனவே இந்த அன்னையர் தின நன்னாளில் அனைவரும் அன்னையை போற்றி வணங்குவோம் !

நன்றி
சாரதா 

Friday, February 20, 2015

அபியும் நானும் !!!

                                

அபியும் நானும் என்றால் எனது பேரன் அபிநவ்வும், நானும் தான்!   என் பேரனுடன் நான்  சந்தோஷமாக இருந்தததை உங்கள் எல்லோரிடம் பகிர்ந்து கொள்ள நினைத்து இதை எழுதுகிறேன்.

அமெரிக்காவிலிருக்கும் என்னுடைய பேரனும், மகளும் கடந்த நவம்பர் மாதம் எங்கள் ஊருக்கு வந்து  இரண்டு மாதங்கள் வரை இருந்தார்கள். அபிநவ் என்னுடன் இருக்கும் போது எனக்கு நேரம் போவதே தெரியாது.

என்னுடைய சமையலில் அவனுக்கு பிடித்தத டிபன் இட்லி, இடியாப்பம், பூரி, சப்பாத்தி போன்றவையாகும். இதை தவிர மேகி நூடுல்ஸ் பிடிக்கும். குழம்பு வகைகளில் காளான் குழம்பு மிகவும் பிடிக்கும்.

Ipad-ல் சில விளையாட்டுகளை விரும்பி விளையாடுவான். அவன் விளையாடும் போது என்னையும் பக்கத்தில் இருந்து பார்க்கச் சொல்வான். சில விளையாட்டுக்களை எனக்கும் சொல்லிக் கொடுப்பான். எனக்கும் அவனுடன் சேர்ந்து விளையாடுவது மிகவும் சந்தோஷமாக இருக்கும். டீ கப்பில் கலர் பால் வைத்து ஐஸ் கிரீம் என்று சொல்லி விளையாடுவான். அபியும் நானும் சில நேரங்களில் தோட்டத்தை ஒரு முறை சுற்றி வருவோம். அபிக்கு மண்வெட்டி வைத்து தோண்டி விளையாடுவதும் பிடிக்கும்.
                                                                            
 கோலம் போட்டு விளையாடுவதையும் மிகவும் விரும்புவான். திருக்கார்த்திகை அன்று அவனுடைய அம்மா போட்ட கோலத்தை மிகவும் ரசித்து பார்த்தான். அன்று என்னுடைய அம்மாவும் வந்திருந்தாங்க.திருக்கார்த்திகை அன்று இனிப்பு கொழுக்கட்டை செய்து சாமிக்கு படைத்தது அபியுடன் நாங்கள் எல்லோரும் சேர்ந்து மகிழ்ச்சியாக கொண்டாடினோம்.                                                                                                               
                                                                         
தினமும் என்னுடன்  கடைக்கு  வந்து ஒரு கிண்டர் ஜாய் வாங்கி கொள்வான். ஒரே கடையில் வாங்குவதால் அந்த கடைக்கு same shop என்று பெயர் வைத்திருந்தான். எங்கள் தெருவில் கிறிஸ்தவர்கள் நிறைய பேர் இருப்பதால் எல்லோருடைய வீட்டிலும் ஸ்டார் போட்டிருந்தார்கள். அபியும், நானும் எனது மகளும் சூப்பர் மார்க்கெட் சென்று ஸ்டார் வாங்கி எங்கள் வீட்டிலும் போட்டிருந்தோம். மேலும் சில கடைகள், பொருட்காட்சி என்று அவனுடன் சென்று வந்தோம்.

டிசம்பர் மாதம் அபிநவ் அப்பாவும் இங்கு வந்துட்டாங்க. அப்பாவுடன் அபிநவ் சந்தோஷமாக பொழுதை கழித்தான். எனக்கும் எல்லோரும் இங்கு இருந்தது நேரம் போனதே தெரியவில்லை.
பொங்கலுக்கு கடைக்கு சென்று எல்லோருக்கும் டிரெஸ் வாங்கி வந்தோம். அபிக்கு வேஸ்டி, சட்டை,  அங்கவஸ்திரம்  என்று செட் ஆக எடுத்தோம்.

    அபிநவ் பொங்கல் டிரெஸ்சில்                                                                                   
பொங்கல் முடிந்தவுடன் மகள், மருமகன், பேரன் எல்லோரும் ஊருக்கு சென்று விட்டார்கள். என்னுடைய சந்தோஷத்தை உங்கள் எல்லோரிடம் பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

நன்றி
சாரதா 

Tuesday, October 28, 2014

வாழ்க்கையின் சின்னசின்ன சந்தோஷங்கள்

                           

இன்றைய காலகட்ட நெருக்கடியான வாழ்க்கையிலும் சின்னசின்ன சந்தோஷங்கள் வாழ்க்கைக்கு சுவை சேர்க்கிறது. என்னை மகிழ்ச்சிப்படுத்தும் சின்னசின்ன சந்தோஷமான விஷயங்களை உங்கள் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்கிறேன்.

வீட்டிற்கு வரும் விருந்தாளிகள் நீ உன் சமையல் அறையை நல்ல சுத்தமாக வைத்திருக்கிறாய் என்று பாராட்டும் போது என் உழைப்புக்கான மகிழ்ச்சி!

இட்லி அல்லது வடைக்கு மாவு அரைத்து எடுத்து கிரைண்டரை சுத்தப்படுத்திய பிறகு கரண்ட் கட் ஆகும் போது மாவு அரைத்து முடித்த சந்தோஷத்தில் ஏற்படும் ஒரு சின்ன மகிழ்ச்சி!

பண்டிகை நாட்களில் வீட்டை அலங்கரித்து முடிக்கையில் தோன்றும் பெருமித மகிழ்ச்சி!

மார்கெட் சென்று தேவையான காய்கறிகளை வாங்கி முடித்து வெளியில் வந்தவுடன் சாலை ஓரத்தில் இருக்கும் கரும்புச்சாறு வாங்கி பருகும் போது  உடலும், உள்ளமும் பெற்றிடும் மகிழ்ச்சி!

விருந்தினர்கள் வரும் போது பதற்றத்துடன் செய்த குழம்பு வகைகள், கூட்டு வகைகள் எல்லாம் நல்ல ருசியாக அமைந்து விடுவது எல்லையில்லா மகிழ்ச்சி!

வேலை முடிந்து களைப்பாக இருக்கும் போது மகள் டீ தயாரித்து தரும் போது அளவில்லா மகிழ்ச்சி! (சுவையுடன் பாசமும் அதிகமாக இருக்கும்)

நமக்கு நாமே பிளவுஸ் தைத்து முடித்தவுடன் கரெக்ட் ஆக இருக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி!

டி. வி யில் பழைய பாடல்கள் கேட்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி!

என்னுடைய பேரன் வீடியோ சாட்டில் வந்து என்னுடன் பேசும் போதும் சாரதா ஆச்சி என்று எழுதி காண்பித்ததை நினைத்து அளவில்லா மகிழ்ச்சி!

என்னுடைய பேத்தி என்னுடன் விளையாடியதும் என்னை ஆச்சி என்று அழைத்து மழலையில் பேசியதையும் நினைத்து அளவில்லா மகிழ்ச்சி!

இப்படியாக நாம் வாழ்க்கையில் கிடைக்கின்ற சின்னசின்ன சந்தோஷங்களை நினைத்து நம்முடைய வாழ்க்கையை சந்தோஷமாக வாழ பழகிக் கொள்ளவேண்டும்.

நன்றி
சாரதா

Friday, October 17, 2014

தீபாவளி வாழ்த்துக்கள்

                             

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி வர இருக்கிறது. தீபாவளி பண்டிகை தீப ஒளி திருநாளாக கொண்டாடப்படுகிறது.

இந்த நல்ல நாளில் மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து வீட்டில் இனிப்பு பண்டங்கள் செய்து அதை உறவினர்களுக்கும், சினேகிதிகளுக்கும் கொடுத்து மகிழ்வார்கள். தீபாவளிக்கு முந்தைய நாளே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மத்தாப்புகள் கொளுத்தியும், பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வார்கள். பார்ப்பதற்கு வண்ணமயமாக காட்சி அளிக்கும்.

இந்த நல்ல நாளில் எல்லோரும் சந்தோஷமாக கொண்டாட உங்கள் அனைவருக்கும் என்னுடைய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!!

தீபாவளி ஸ்பெஷல் -
  1. அதிரசம் 
  2. தேன்குழல் முறுக்கு 
  3. சீடை 
  4. சுசியம் 
  5. முந்திரிக் கொத்து 
  6. மைதா போண்டா 
  7. மைதா பிஸ்கட் 
  8. பொட்டுக்கடலை லட்டு 
  9. ரவா லட்டு 
  10. ரவா கேசரி 
  11. ஓட்ஸ் லட்டு 
  12. பாசிப்பருப்பு உருண்டை 
  13. கோதுமை அப்பம் 
  14. மெது பக்கோடா 
  15. முள்ளு முறுக்கு 
  16. வாழைக்காய் பஜ்ஜி 
  17. உளுந்த வடை 
  18. பட்டாணிப்பருப்பு வடை 
  19. நெய்க்கடலை 
  20. கேரட் அல்வா
  21. காராப் பூந்தி

Wednesday, October 8, 2014

பாளை முப்பிடாதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

                 

முப்பிடாதி அம்மன் கோவில் பாளையங்கோட்டையில் உள்ள கோட்டூர் சாலையில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. எனவே கோவிலை புதுப்பிக்க நினைத்து இரண்டு ஆண்டுகளாக வேலை நடந்து வந்தது. பக்தர்கள் அணைவரும் கொடுத்த நன்கொடையால் கோவில் புதுப்பிக்கும் பணிகளும் கோபுர வேலைப்பாடும் நல்லபடியாக முடிந்து 10.9.2014 அன்று முப்பிடாதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

                                              முப்பிடாதி அம்மன் கோவிலின் தோற்றம்
                             

6.9.2014 முதல் 9.9.2014 வரையாக வழிபாடு நடத்துவதற்க்கு ஏற்பாடுகள் செயப்பட்டிருந்தது. பிறகு யாக வழிபாடு நல்ல முறையில் நடந்ததது.


கும்பாபிஷேகத்திற்கு முந்தைய நாள் முப்பிடாதி அம்மனின் மூத்த சகோதரியான பேராச்சி அம்மனின் பாதத்தில் தண்ணீர் குடத்தை வைத்து வழிபட்டு வந்த தண்ணீரால் முப்பிடாதி அம்மனை நீராட்டினார்கள். பொது மக்கள் அணைவரும் வீட்டிலிருந்து தண்ணீர் எடுத்து வந்து பிள்ளையாரை நீராட்டினார்கள். அன்று மாலையில் யானை ஊர்வலம் வீதி முழுவதும் உலா வந்தது.

கும்பாபிஷேகம் அன்று காலை 5 மணிக்கு மங்கள இசை நடந்தது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
                                        
காலை 6 மணிக்கு 4ம் கால யாக பூஜைகள் ஆரம்பமானது. 7 மணிக்கு அஸ்தர ஹோமம் நடந்தது. 9 மணி முதல் 10.30 மணிக்குள் கும்பம் எழுந்தருளல், விமான கோபுர கும்பாபிஷேகம் நடைபெற்றது. 12 மணிக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. 12 மணிக்கு மேல் கோவிலில் 15000 பேருக்கு அன்னதானம் நடைபெற்றது. மாலை 7 மணிக்கு அம்பாள் சப்பரம் வீதி உலா வந்தது.

இப்படியாக பாளை முப்பிடாதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் இனிதே நடந்து முடிந்தது.

முப்பிடாதி அம்மன் கோவில் எனது அம்மா வீட்டிற்கு அருகில் உள்ளது. நான் கும்பாபிஷேகத்திக்கு முந்தைய நாளே சென்று விட்டேன். அன்று வெளியூரிலிருக்கும் என்னுடைய பழைய தோழிகள் நிறைய பேர் வந்திருந்தார்கள். அன்று எல்லோரும் ஒன்றாக சேர்ந்து மிகவும் சந்தோஷமாக இருந்தோம். எங்கள் எல்லோருக்கும் அம்மனின் அருளும் கிடைத்தது.

நன்றி
சாரதா
Related Posts Plugin for WordPress, Blogger...