Tuesday, October 28, 2014

வாழ்க்கையின் சின்னசின்ன சந்தோஷங்கள்

                           

இன்றைய காலகட்ட நெருக்கடியான வாழ்க்கையிலும் சின்னசின்ன சந்தோஷங்கள் வாழ்க்கைக்கு சுவை சேர்க்கிறது. என்னை மகிழ்ச்சிப்படுத்தும் சின்னசின்ன சந்தோஷமான விஷயங்களை உங்கள் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்கிறேன்.

வீட்டிற்கு வரும் விருந்தாளிகள் நீ உன் சமையல் அறையை நல்ல சுத்தமாக வைத்திருக்கிறாய் என்று பாராட்டும் போது என் உழைப்புக்கான மகிழ்ச்சி!

இட்லி அல்லது வடைக்கு மாவு அரைத்து எடுத்து கிரைண்டரை சுத்தப்படுத்திய பிறகு கரண்ட் கட் ஆகும் போது மாவு அரைத்து முடித்த சந்தோஷத்தில் ஏற்படும் ஒரு சின்ன மகிழ்ச்சி!

பண்டிகை நாட்களில் வீட்டை அலங்கரித்து முடிக்கையில் தோன்றும் பெருமித மகிழ்ச்சி!

மார்கெட் சென்று தேவையான காய்கறிகளை வாங்கி முடித்து வெளியில் வந்தவுடன் சாலை ஓரத்தில் இருக்கும் கரும்புச்சாறு வாங்கி பருகும் போது  உடலும், உள்ளமும் பெற்றிடும் மகிழ்ச்சி!

விருந்தினர்கள் வரும் போது பதற்றத்துடன் செய்த குழம்பு வகைகள், கூட்டு வகைகள் எல்லாம் நல்ல ருசியாக அமைந்து விடுவது எல்லையில்லா மகிழ்ச்சி!

வேலை முடிந்து களைப்பாக இருக்கும் போது மகள் டீ தயாரித்து தரும் போது அளவில்லா மகிழ்ச்சி! (சுவையுடன் பாசமும் அதிகமாக இருக்கும்)

நமக்கு நாமே பிளவுஸ் தைத்து முடித்தவுடன் கரெக்ட் ஆக இருக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி!

டி. வி யில் பழைய பாடல்கள் கேட்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி!

என்னுடைய பேரன் வீடியோ சாட்டில் வந்து என்னுடன் பேசும் போதும் சாரதா ஆச்சி என்று எழுதி காண்பித்ததை நினைத்து அளவில்லா மகிழ்ச்சி!

என்னுடைய பேத்தி என்னுடன் விளையாடியதும் என்னை ஆச்சி என்று அழைத்து மழலையில் பேசியதையும் நினைத்து அளவில்லா மகிழ்ச்சி!

இப்படியாக நாம் வாழ்க்கையில் கிடைக்கின்ற சின்னசின்ன சந்தோஷங்களை நினைத்து நம்முடைய வாழ்க்கையை சந்தோஷமாக வாழ பழகிக் கொள்ளவேண்டும்.

நன்றி
சாரதா

Friday, October 17, 2014

தீபாவளி வாழ்த்துக்கள்

                             

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி வர இருக்கிறது. தீபாவளி பண்டிகை தீப ஒளி திருநாளாக கொண்டாடப்படுகிறது.

இந்த நல்ல நாளில் மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து வீட்டில் இனிப்பு பண்டங்கள் செய்து அதை உறவினர்களுக்கும், சினேகிதிகளுக்கும் கொடுத்து மகிழ்வார்கள். தீபாவளிக்கு முந்தைய நாளே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மத்தாப்புகள் கொளுத்தியும், பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வார்கள். பார்ப்பதற்கு வண்ணமயமாக காட்சி அளிக்கும்.

இந்த நல்ல நாளில் எல்லோரும் சந்தோஷமாக கொண்டாட உங்கள் அனைவருக்கும் என்னுடைய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!!

தீபாவளி ஸ்பெஷல் -
 1. அதிரசம் 
 2. தேன்குழல் முறுக்கு 
 3. சீடை 
 4. சுசியம் 
 5. முந்திரிக் கொத்து 
 6. மைதா போண்டா 
 7. மைதா பிஸ்கட் 
 8. பொட்டுக்கடலை லட்டு 
 9. ரவா லட்டு 
 10. ரவா கேசரி 
 11. ஓட்ஸ் லட்டு 
 12. பாசிப்பருப்பு உருண்டை 
 13. கோதுமை அப்பம் 
 14. மெது பக்கோடா 
 15. முள்ளு முறுக்கு 
 16. வாழைக்காய் பஜ்ஜி 
 17. உளுந்த வடை 
 18. பட்டாணிப்பருப்பு வடை 
 19. நெய்க்கடலை 
 20. கேரட் அல்வா
 21. காராப் பூந்தி

காராப் பூந்தி / Kara Boondi

தேவையான பொருள்கள் -
 1. கடலைப்பருப்பு - 200 கிராம்
 2. இட்லி அரிசி - 50 கிராம் 
 3. நிலக்கடலை - 3 மேஜைக்கரண்டி 
 4. மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி 
 5. காயத்தூள் - சிறிது 
 6. கறிவேப்பிலை - சிறிது 
 7. உப்பு - தேவையான அளவு 
 8. எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை -
 1. முதலில் கடலைப்பருப்பு, அரிசி இரண்டையும் தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
 2. ஊறிய பின் பருப்பு, அரிசியுடன் மிளகாய் தூள், காயத்தூள், உப்பு சேர்த்து கிரைண்டரில் இட்லி மாவு பதத்தை விட கொஞ்சம் தளர்வாக அரைத்துக் கொள்ளவும். 5 நிமிடங்களில் அரைபட்டு விடும்.                                                                                      
 3. நிலக்கடலையை வறுத்து தோலுரித்துக் கொள்ளவும்.
 4. அடுப்பில் கடாயை வைத்து எண்ணைய் ஊற்றி சூடானதும் எண்ணெயின் மேல் ஒரு பெரிய கண் கரண்டியை வைத்து ஒரு மேஜைக்கரண்டி மாவு எடுத்து அதில் ஊற்றி வேகமாக தேய்த்து கடாய் கொள்ளும் அளவுக்கு போட்டு மிதமான சூட்டில் வைத்து வேக விடவும்.
 5. பூந்தி நன்கு சிவந்ததும் எடுத்து விடவும். மீதமுள்ள எல்லா மாவையும் இதே முறையில் போட்டு வெந்தவுடன் எடுத்து டிஸ்யு பேப்பரில் பரப்பி ஆற விடவும்.
 6. சூடாக இருக்கும் எண்ணையில் கறிவேப்பிலையை வறுத்து காரப்பூந்தியுடன் சேர்க்கவும். பிறகு வறுத்து வைத்துள்ள நிலக்கடலையும் சேர்த்து கலந்து விடவும்.
 7. எண்ணெய் நன்கு உறிஞ்சியவுடன் காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு வைக்கவும். சுவையான காராப் பூந்தி ரெடி.

Wednesday, October 8, 2014

பாளை முப்பிடாதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

                 

முப்பிடாதி அம்மன் கோவில் பாளையங்கோட்டையில் உள்ள கோட்டூர் சாலையில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. எனவே கோவிலை புதுப்பிக்க நினைத்து இரண்டு ஆண்டுகளாக வேலை நடந்து வந்தது. பக்தர்கள் அணைவரும் கொடுத்த நன்கொடையால் கோவில் புதுப்பிக்கும் பணிகளும் கோபுர வேலைப்பாடும் நல்லபடியாக முடிந்து 10.9.2014 அன்று முப்பிடாதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

                                              முப்பிடாதி அம்மன் கோவிலின் தோற்றம்
                             

6.9.2014 முதல் 9.9.2014 வரையாக வழிபாடு நடத்துவதற்க்கு ஏற்பாடுகள் செயப்பட்டிருந்தது. பிறகு யாக வழிபாடு நல்ல முறையில் நடந்ததது.


கும்பாபிஷேகத்திற்கு முந்தைய நாள் முப்பிடாதி அம்மனின் மூத்த சகோதரியான பேராச்சி அம்மனின் பாதத்தில் தண்ணீர் குடத்தை வைத்து வழிபட்டு வந்த தண்ணீரால் முப்பிடாதி அம்மனை நீராட்டினார்கள். பொது மக்கள் அணைவரும் வீட்டிலிருந்து தண்ணீர் எடுத்து வந்து பிள்ளையாரை நீராட்டினார்கள். அன்று மாலையில் யானை ஊர்வலம் வீதி முழுவதும் உலா வந்தது.

கும்பாபிஷேகம் அன்று காலை 5 மணிக்கு மங்கள இசை நடந்தது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
                                        
காலை 6 மணிக்கு 4ம் கால யாக பூஜைகள் ஆரம்பமானது. 7 மணிக்கு அஸ்தர ஹோமம் நடந்தது. 9 மணி முதல் 10.30 மணிக்குள் கும்பம் எழுந்தருளல், விமான கோபுர கும்பாபிஷேகம் நடைபெற்றது. 12 மணிக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. 12 மணிக்கு மேல் கோவிலில் 15000 பேருக்கு அன்னதானம் நடைபெற்றது. மாலை 7 மணிக்கு அம்பாள் சப்பரம் வீதி உலா வந்தது.

இப்படியாக பாளை முப்பிடாதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் இனிதே நடந்து முடிந்தது.

முப்பிடாதி அம்மன் கோவில் எனது அம்மா வீட்டிற்கு அருகில் உள்ளது. நான் கும்பாபிஷேகத்திக்கு முந்தைய நாளே சென்று விட்டேன். அன்று வெளியூரிலிருக்கும் என்னுடைய பழைய தோழிகள் நிறைய பேர் வந்திருந்தார்கள். அன்று எல்லோரும் ஒன்றாக சேர்ந்து மிகவும் சந்தோஷமாக இருந்தோம். எங்கள் எல்லோருக்கும் அம்மனின் அருளும் கிடைத்தது.

நன்றி
சாரதா

நாட்டுக்கோழி குழம்பு / Nattu kozhi kuzhambu

 பரிமாறும் அளவு - 3 நபருக்கு

தேவையான பொருள்கள் -
 1. நாட்டுக்கோழி - 1/2 கிலோ 
 2. தக்காளி - 2
 3. பச்சை மிளகாய் - 2
 4. தயிர்  - 2 மேஜைக்கரண்டி 
 5. இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி 
 6. மல்லித்தழை - சிறிது 
 7. கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி 
 8. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி 
 9. உப்பு - தேவையான அளவு 
வறுத்து திரிக்க -
 1. மிளகாய் வத்தல் -5
 2. கொத்தமல்லி - 5 மேஜைக்கரண்டி 
 3. சீரகம் - 1 மேஜைக்கரண்டி 
 4. மிளகு - 1 மேஜைக்கரண்டி 
வறுத்து அரைக்க -
 1. தேங்காய் துருவல் - 100 கிராம்                  
தாளிக்க -
 1. எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி 
 2. பட்டை - 1 இன்ச் அளவு 
 3. கிராம்பு - 2
 4. பெரிய வெங்காயம் - 1
 5. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
 1. முதலில் கோழி துண்டுகளை நன்கு சுத்தப்படுத்தி வைக்கவும். தக்காளி, வெங்காயம் இரண்டையும் பொடிதாக வெட்டி வைக்கவும். மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
 2. அடுப்பில் கடாயை வைத்து சூடானவுடன் மிளகாய் வத்தல், கொத்தமல்லி, சீரகம், மிளகு எல்லாவற்றையும் போட்டு கிளறி அடுப்பை அணைத்து விட்டு சிறிது நேரம் ஆற விடவும். ஆறிய பிறகு மிக்ஸ்சியில் திரித்துக் கொள்ளவும்.             
 3. தேங்காயையும் நன்கு வறுத்து மிக்ஸ்சியில் அரைக்கவும்.
 4. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போடவும். பிறகு கறிவேப்பில்லை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். 
 5. வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை  வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்.                                 
 6. தக்காளி நன்கு வதங்கியதும் தயிர், திரித்து வைத்துள்ள பொடி, கரம் மசாலா தூள், மஞ்சள்தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அதனுடன் உப்பும் கோழித்துண்டுகளையும் சேர்த்து மசாலா எல்லா இடங்களிலும் படும் படி நன்கு கிளறி விடவும்.
 7. பிறகு அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து மசாலா வாடை போகும் வரை கொதிக்க விடவும்.                                                                                    
 8. மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.                                                                
 9. குழம்பு கெட்டியானதும் மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான நாட்டுக்கோழி குழம்பு ரெடி.                                            

உருளைக்கிழங்கு குழம்பு / Potato kuzambu


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
 1. உருளைக்கிழங்கு - 2
 2. தக்காளி -1
 3. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி 
 4. கரம்மசாலா பொடி - 1/2 தேக்கரண்டி 
 5. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 
 6. உப்பு - தேவையான அளவு                              
பொடிக்க -
 1. மிளகாய் வத்தல் - 2
 2. கொத்தமல்லி - 3 மேஜைக்கரண்டி 
 3. சீரகம் - 1 தேக்கரண்டி 
அரைக்க -
 1. தேங்காய் துருவல் - 1/4 கப் ( 25 கிராம்)
 2. பாதாம் பருப்பு - 4
 3. மல்லித்தழை - சிறிது                                    
தாளிக்க -
 1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
 2. பட்டை - 1 இன்ச் 
 3. கிராம்பு - 2
 4. வெங்காயம் - 1/4 பங்கு 
 5. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
 1. உருளைக்கிழங்கை குக்கரில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும். நீராவி அடங்கியதும் உருளைக்கிழங்கை எடுத்து சிறிது நேரம் ஆற விடவும்.
 2. ஆறிய பிறகு உருளைக்கிழங்கை தோலுரித்து சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். தக்காளியை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.                                   
 3. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் அடுப்பை அணைத்து விட்டு அந்த சூட்டில் மிளகாய் வத்தல், மல்லி, சீரகம் மூன்றையும் போட்டு கிளறி சிறிது நேரம் ஆற விடவும். நன்கு ஆறிய பிறகு மிக்ஸ்சியில் திரித்துக் கொள்ளவும்.                                   
 4. பாதாம்பருப்பை தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைத்து தோலுரித்துக் கொள்ளவும். தேங்காய் துருவல், பாதாம் பருப்பு, மல்லித்தழை மூன்றையும் மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
 5. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போடவும். பிறகு கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
 6. வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்கு வதக்கவும். 
 7. பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி சுருள வதங்கியதும் திரித்து வைத்துள்ள பொடி, மஞ்சள்தூள், கரம் மசாலா பொடி சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்.
 8.  பிறகு அவித்து வைத்துள்ள உருளைகிழங்கையும் சேர்த்து  ஒரு கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மசாலா வாடை போகும் வரை நன்கு கொதிக்க விடவும்.
 9. மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். குழம்பு கெட்டியானதும் உப்பு சரி பார்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான உருளைக்கிழங்கு குழம்பு ரெடி.
Related Posts Plugin for WordPress, Blogger...