Wednesday, August 28, 2013

தட்டப்பயறு சுண்டல்



பரிமாறும்அளவு - 4 நபருக்கு

தேவையான பொருள்கள் -

  1. தட்டப்பயறு - 1 கப் (200 கிராம்)
  2. தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி
  3. உப்பு - தேவையான அளவு

தாளிக்க -

  1. நல்லெண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
  2. காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
  3. கடுகு - 1 தேக்கரண்டி
  4. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
  5. மிளகாய் வத்தல் - 2
  6. கறிவேப்பிலை - சிறிது

செய்முறை -

  1. முதலில் தட்டப்பயறை நன்றாக கழுவி தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. ஊறிய பயறு, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். நீராவி அடங்கியதும் மூடியை திறந்து தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ளவும். உப்பு தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக் கொள்ளவும்.                                  
  3. அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய் வத்தல், காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். பிறகு கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, தட்டப்பயறு சேர்த்து நன்றாக கிளறவும். 
  4. கடைசியாக தேங்காய் துருவலை சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். சுவையான தட்டப்பயறு சுண்டல் ரெடி.                                               
                                             
                   .





Tuesday, August 13, 2013

காளான் கிரேவி / Mushroom Gravy

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பட்டர் காளான் - 150 கிராம் 
  2. தக்காளி - 1
  3. பெரிய வெங்காயம் - 2
  4. முந்திரிப்பருப்பு - 10
  5. ஏலக்காய் - 2
  6. கிராம்பு - 2
  7. பூண்டு பல் - 10
  8. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 
  9. மல்லித்தழை - சிறிது 
  10. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி 
  11. மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி 
  12. சீரகத்தூள் - 1 தேக்கரண்டி 
  13. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி 
  14. பெருஞ்சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி 
  15. தக்காளி சாஸ் - 3 தேக்கரண்டி 
  16. கஸ்தூரி மேத்தி - 2 தேக்கரண்டி 
  17. எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி 
செய்முறை -
  1. முதலில் காளானை சுத்தப்படுத்தி நீளவாக்கில் வெட்டி வைக்கவும். பெரிய வெங்காயத்தை தோலுரித்து நீளவாக்கில் வெட்டி வைக்கவும். தக்காளியை பொடிதாக நறுக்கி வைக்கவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி எண்ணைய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை  போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். 
  3. பிறகு தக்காளி சேர்த்து நன்கு வதக்கி அடுப்பிலிருந்து இறக்கி சிறிது நேரம் ஆற விடவும்.
  4. ஆறியவுடன் மிக்ஸ்சியியில் வதக்கி வைத்துள்ள கலவையுடன் முந்திரிப்பருப்பு, ஏலக்காய், கிராம்பு, மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், பெருஞ்சீரகத்தூள், மல்லித்தழை எல்லாவற்றையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  5. அடுப்பில் கடாயை வைத்து மீதமுள்ள 3 மேஜைக்கரண்டி எண்ணைய் ஊற்றி சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து  நறுக்கி வைத்துள்ள பூண்டுபற்களை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  6. பூண்டு பொன்னிறமானதும் காளானை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.பிறகு அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து கிளறி 100 மில்லி தண்ணீர் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து மூடி போட்டு 10 நிமிடம் வேக விடவும்.
  7. காளான் வெந்ததும் தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக் கொள்ளவும். பிறகு  தக்காளி சாஸ் சேர்க்கவும்.
  8. கிரேவி கெட்டியானதும் கஸ்தூரி மேத்தி சேர்த்து நன்றாக கலக்கி விடவும். சுவையான காளான் கிரேவி ரெடி.

ஆப்பம் - மற்றொரு முறை

பரிமாறும் அளவு - 4 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. இட்லி அரிசி - 200 கிராம்
  2. வெள்ளை முழு உளுந்து - 50 கிராம்
  3. பச்சரிசி - 200 கிராம்
  4. சாதம் - 150 கிராம்
  5. தேங்காய் துருவல் - 200 கிராம்
  6. சோடா மாவு - 1 தேக்கரண்டி
  7. உப்பு - தேவையான அளவு
செய்முறை -
  1. இட்லி அரிசி, பச்சரிசி, உளுந்து ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. கிரைண்டரில் சாதம், தேங்காய் துருவல், ஊற வைத்த அரிசி, உளுந்து அனைத்தையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ளவும். 8 மணி நேரம் மாவை  புளிக்க விடவும்.
  3. சுடுவதற்கு முன்னால் உப்பு, சோடா உப்பை சேர்த்து மாவை நன்றாக கலக்கவும். மாவை சிறிது  தண்ணீராக கரைத்துக் கொள்ளவும்.
  4. பிறகு அடுப்பில் ஆப்ப சட்டியை வைத்து ஒரு கரண்டி மாவை ஊற்றி மூடி போட்டு வேக வைத்து ஆப்பத்தை சுட்டு எடுக்கவும்.
  5. ஆப்பத்தை தேங்காய்பால் அல்லது குருமாவுடன் சாப்பிடலாம்.

Thursday, August 8, 2013

கத்தரிக்காய் உருளைக்கிழங்கு ப்ரை


பரிமாறும் அளவு - 3நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. கத்தரிக்காய் - 100 கிராம்
  2. உருளைக்கிழங்கு - 100 கிராம்
  3. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  4. மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
  5. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  6. உப்பு - தேவையான அளவு                             

தாளிக்க -
  1. எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
  2. கடுகு - 1 தேக்கரண்டி
  3. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
  4. பெரிய வெங்காயம் - 3/4
  5. கறிவேப்பிலை - சிறிது
  6. மல்லித் தழை - சிறிது                                    

செய்முறை -

  1. உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு வேக வைத்து தோலுரித்துசிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.                                  
  2. கத்தரிக்காயை சிறிய துண்டுகளாக வெட்டி தண்ணீரில் போட்டு வைக்கவும். வெங்காயத்தை பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.                                                                           
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பாதி வதங்கியதும் உப்பு, மிளகாய் தூள், மிளகுத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்.
  4. பின்னர் வெட்டி வைத்துள்ள கத்தரிக்காய் துண்டுகளை சேர்த்து மிதமான சூட்டில் வைத்து வதக்கவும்.                                                                                   
  5. நன்கு வெந்ததும் உருளைக்கிழங்கை சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து 2 நிமிடம் கிளறி மல்லித் தழை தூவி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.            

உருளைக்கிழங்கு கட்லெட்

தேவையான பொருள்கள் -
  1. உருளைக்கிழங்கு - 3
  2. மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
  3. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  4. கரம் மசாலா - 1 தேக்கரண்டி
  5. முட்டை - 2
  6. பிரட் துண்டுகள் - 2 அல்லது 3
  7. உப்பு - தேவையான அளவு
  8. எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
தாளிக்க -
  1. எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
  2. பெரிய வெங்காயம் - 1
செய்முறை -
  1. குக்கரில் உருளைக்கிழங்கை வேக வைத்துக் கொள்ளவும். நன்கு ஆறிய பின் தோலுரித்து மசித்து வைக்கவும்.
  2. பிரட் துண்டுகளின் ஓரங்களை எடுத்து விட்டு வெள்ளைப் பகுதியை மிக்ஸ்சியில் போட்டு தூளாக்கிக் கொள்ளவும். முட்டைகளை உடைத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி கலக்கி வைக்கவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்.
  4. பின்னர் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக கிளறவும். பிறகு கரம் மசாலா சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.
  5. ஆறியதும் மசாலாவை எலுமிச்சை அளவு எடுத்து உருண்டையாக உருட்டி பிரட் தூளில் பிரட்டி தட்டி வைத்துக் கொள்ளவும். மீதமுள்ள மாவையும் இவ்வாறே செய்யவும்.
  6. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான சூட்டில் வைத்து கட்லெட்களை முட்டை கலவையில் டிப் பண்ணி போடவும். சிறிது நேரம் கழித்து திருப்பி போடவும். இரண்டு பக்கமும் பொன்னிறமானதும் எடுத்து விடவும்.
  7. சுவையான கட்லட் ரெடி. தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

Wednesday, August 7, 2013

வத்தக் குழம்பு

பரிமாறும் அளவு - 3 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. சுண்டைக்காய் வத்தல் அல்லது மணத்தக்காளி வத்தல் - 1 மேஜைக்கரண்டி
  2. புளி - நெல்லிக்காய் அளவு
  3. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  4. சீரகம் - 1 தேக்கரண்டி
  5. உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைக்க -
  1. மிளகாய் வத்தல் - 2
  2. கொத்தமல்லி - 2 மேஜைக்கரண்டி
  3. மிளகு - 1/2 தேக்கரண்டி
அரைக்க -
  1. தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி
  2. சின்ன வெங்காயம் - 3
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
  2. கடுகு - 1 தேக்கரண்டி
  3. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
  4. வெந்தயம் - 1 தேக்கரண்டி
  5. வெங்காயம் - சிறிது
  6. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை -
  1. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் மிளகாய் வத்தல், கொத்தமல்லி, மிளகு எல்லாவற்றையும் போட்டு வறுத்துக் கொள்ளவும். அடுப்பை சிம்மில் வைத்து கருக விடாமல் வறுத்து ஆற வைக்கவும். ஆறிய பிறகு வறுத்த பொருட்களோடு சீரகத்தையும் சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
  2. தேங்காய் மற்றும் சின்ன வெங்காயத்தை அரைத்துக் கொள்ளவும். புளியை 50 மில்லி தண்ணீரில் ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில் புளிக் கரைசல் மற்றும் 200 மில்லி தண்ணிர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். கொதிக்க ஆரம்பித்ததும் அரைத்து வைத்துள்ள மசாலா, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
  4. மசாலா வாடை போனதும் தேங்காய் கலவையை சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்க விடவும். குழம்பு கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
  5. அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு தாளிக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் சுண்டைக்காய் வத்தல், வெந்தயம் போட்டு தாளித்து குழம்பில் சேர்த்து நன்றாக கலக்கி விடவும். சுவையான வத்தக்குழம்பு ரெடி.

பச்சை மிளகாய் பச்சடி / Green Chilly Pachadi / Milagai Pachadi

தேவையான பொருள்கள் -
  1. பச்சைமிளகாய் - 100 கிராம்
  2. சின்ன வெங்காயம் - 100 கிராம்
  3. மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி
  4. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  5. புளி - எலுமிச்சை அளவு
  6. வெல்லம் (பொடித்தது) - 4 மேஜைக்கரண்டி
  7. உப்பு - தேவையான அளவு                        
அரைக்க -
  1. தேங்காய் துருவல் - 5 மேஜைக்கரண்டி        
தாளிக்க -
  1. எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
  2. கடுகு - 1 மேஜைக்கரண்டி
  3. உளுந்தம் பருப்பு - 1/2 மேஜைக்கரண்டி
செய்முறை -
  1. பச்சை மிளகாய், வெங்காயம் இரண்டையும் பொடிதாக நறுக்கிக் கொள்ளவும். இரண்டும் சம அளவாக எடுத்துக் கொள்ளவும். புளியை 100 மில்லி தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும். தேங்காயை மிக்ஸ்சியில் அரைத்து வைக்கவும்.                              
  2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய், வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
  3. வதங்கியதும் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீர், மல்லிப்பொடி, மஞ்சள்தூள், வெல்லத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.                                                  
  4. மசாலா வாடை போனதும் அரைத்த தேங்காய் கலவையை சேர்த்து பச்சடி கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும். காரம் அதிகமாக இருந்தால் கூடுதலாக வெல்லத்தூள் அல்லது சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். 
  5. சுவையான மிளகாய் பச்சடி ரெடி. பச்சை மிளகாய் பச்சடியை பிரிஜ்ஜில் வைத்து சில நாட்கள் வரை கெடாமல் உபயோகிக்கவும். இது இட்லி, தோசை, தயிர் சாதத்துடன் சேர்த்து பரிமாறலாம்.                                                                          

பொட்டுக்கடலை லட்டு


தேவையான பொருள்கள் -
  1. பொட்டுக்கடலை - 200 கிராம்
  2. சர்க்கரை - 100 கிராம்
  3. முந்திரிப் பருப்பு - 10
  4. நெய் - 3 மேஜைக்கரண்டி
  5. மிதமான வெந்நீர் - 50 அல்லது  75 ml
செய்முறை -

  1. பொட்டுக்கடலை மற்றும் முந்திரிப் பருப்பை சேர்த்து மிக்ஸ்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும். சர்க்கரையை தனியாக மிக்ஸ்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
  2. இரண்டையும் ஒரு பாத்திரத்தில் நன்றாக கலந்து வைக்கவும்.              
  3. பின்னர் வெந்நீர் மற்றும் நெய்யை சிறிது சிறிதாக ஊற்றி கெட்டியாகும் வரை நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.
  4. எலுமிச்சை அளவு மாவை எடுத்து நன்றாக உருண்டையாக உருட்டி வைக்கவும். மீதமுள்ள மாவையும் இவ்வாறே செய்யவும்.                                                                             
  5. சுவையான பொட்டுக் கடலை லட்டு ரெடி. இது குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடிய சத்தான லட்டு.
Related Posts Plugin for WordPress, Blogger...