Monday, June 1, 2015

வைகாசி விசாகம்

                                                                                

இன்று வைகாசி விசாகம். முருகனுக்குரிய திருவிழாவாகும்.

முருகன் சைவக்கடவுளான சிவன், பார்வதிக்கு மகனாவார். முருகனுக்கு சரவணன், கார்த்திகேயன், செந்தில், சுப்பிரமணியன் என்று பல பெயர்கள் உண்டு. இவருக்கு கணபதி அண்ணனாக அறியபடுவார்.

வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தை வைகாசி விசாகமாக கொண்டாடப்படுகிறது. வைகாசி விசாகம் என்பது முருகக்கடவுள் அவதாரம் எடுத்த நாளாகும். சிவனிடமிருந்து புறப்பட்ட தீப்பொறி ஓன்று ஆறு பகுதிகளாக சரவணப்பொய்கையில் விழுந்து ஆறு குழந்தைகளாக மாறியது. கார்த்திகைப்பெண்கள் ஆறு பேர் வளர்த்து வந்தார்கள். பிறகு பார்வதி ஒரு கார்த்திகைத் திருநாளில் ஆறு குழந்தைகளையும் ஓன்று சேர்த்து ஆறுமுகமாக்கினார். ஆறு முகங்களைப் பெற்ற முருகன் ஆறுமுகமானார். வைகாசியில் வரக்கூடிய விசாக நட்சத்திரத்தில் முருகக்கடவுளும் ஆறு முகங்களாக காட்சி அளிப்பார் என்று சொல்லப்படுகிறது.

வைகாசி விசாகம் அன்று எல்லா ஊர்களிலும் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடை பெறும். அன்று பக்த்தர்களின் கூட்டமும் அதிகமாக இருக்கும்.

அறுபடை வீடுகளான திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலையில் உள்ள முருகன் கோவில்களில் பக்தர்களின் கூட்டமும், சிறப்பு வழிபாடும் கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

திருச்செந்தூர் - அரசன் சூரபத்மனோடு போரிட்டு வென்று வெற்றி வாகை சூடிய திருத்தலமாகும்.

திருப்பரங்குன்றம் - சூரபத்மனை போரில் வென்ற பின் இந்திரன் மகளான தெய்வானையை மணந்த திருத்தலமாகும்.

பழனி - மாங்கனிக்காக அண்ணன் கணபதியோடு போட்டிபோட்டு  தோற்ற கோபத்தில் தண்டாயுதபாணியாக நின்ற திருத்தலமாகும்.

திருத்தணி - சூரனை வென்றபின் கோபம் தணிந்து குறவர் மகள் வள்ளியை மணந்த திருத்தலமாகும்.

சுவாமி மலை - தன்னுடைய தந்தை சிவனுக்கே பாடம் கற்பித்த திருத்தலமாகும்.

பழமுதிர்சோலை - ஒளவைக்கு பழம் உதிர்த்து வள்ளி, தெய்வானையோடு காட்சி தரும் திருத்தலமாகும்.                                                                                                                                                                                                             
இவ்வாறாக அறுபடைவீடுகளின் சிறப்பு பற்றி சொல்லப்படுகிறது.

எங்கள் ஊரான பாளையங்கோட்டையில் உள்ள தாமிரபரணி ஆற்றின் கரைப் பகுதியில் குறுக்குத்துறை முருகன் கோவிலில் வைகாசி விசாகம் சிறப்பாக கொண்டாடப்படும். தாமிரபரணி தண்ணீர் முருகனின் பாதம் பட்டு சிலிர்ப்புடன் சலசலத்து செல்வதாக சொல்லப்படுகிறது.

திருச்செந்தூர் முருகன் கோவில் தோன்றிய காலத்திலேயே குறுக்குத்துறை முருகன் கோவிலும் தோன்றியுள்ளது. ஒரே மாதிரியான இரண்டு முருகன் சிலைகளை உருவாக்கி ஒரு சிலையை திருச்செந்துரிலும், மற்றொன்றை குறுக்குத்துறையிலும் வைத்து வழிபட்டார்கள்.

குறுக்குத்துறையில் உள்ள பாறையில் முருகன் சிலை செய்யப்பட்டு திருச்செந்துருக்கு சென்றதால் குறுக்குத்துறை முருகன் கோவிலை திருச்செந்துரின் தாய் வீடாக கருதப்படுகிறது.

கோவிலுக்கு செல்லும் மக்கள் கட்டு சாதம் எடுத்துக்கொண்டு கிளம்புவார்கள்.கோவிலில் முருகனை தரிசித்து கட்டு சாதத்தை கோவில் பிரகாரத்தில் உட்கார்ந்து சாப்பிட்டு விட்டு மாலையில் தான் வீடு திரும்புவார்கள்.

இப்படியாக எல்லா ஊர்களிலும் உள்ள முருகன் கோவில்களில் வைகாசி விசாகம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

3 comments:

 1. வைகாசி விசாக தரிசனம் தங்கள் பதிவின் மூலம் கிடைத்தது நன்றி சகோ.

  என்னுடைய டாஸ்போர்டில் தங்கள் பதிவு ஏனோவரவில்லை..? நீங்கள் தெரிவித்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 2. வணக்கம் சகோதரி.

  முருகனின் அழகான திருவுருவ படங்களுடன் அவர் அருளை விளக்கும் செய்தியுமாய், இந்தப் பதிவை மிகவும் பக்தியுடன் படித்தேன். நான் சிறு வயதில் குறுக்குத்துறை ஒருமுறை பெற்றோருடன் சென்றிருக்கிறேன். அதிகமாக நினைவில்லை.! ஆனால் அடுத்த தடவை திருநெல்வேலி செல்லும் போது குறுக்குத்துறை சென்று முருகனை மனதாற தரிசிக்க தூண்டியது தங்களின் இந்தப்பதிவு. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
 3. எனக்கும் உங்க பதிவுகள் டாஷ்போர்ட் ல் வரவில்லை. உமையாள் பக்கம் நீங்க கொடுத்திருந்த கருத்தைப்பார்த்தே நான் இங்கு வந்தேன்.
  எங்க ஊரிலும் வைகாசி விசாகம் சிறப்பாக நடைபெறும். வீட்டுக்கு முன்னால் முருகன் கோவில்தான். ஞாபகங்கள் நினைவுக்கு வந்துவிட்டது.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...