Tuesday, April 29, 2014

வேர்க்கடலை சுண்டல் / Peanut Sundal

                 
தேவையான பொருள்கள் -
  1. பச்சை வேர்க்கடலை - 150 கிராம் 
  2. தேங்காய் துருவல் - 2 மேஜைக்கரண்டி 
  3. உப்பு - தேவையான அளவு                        
தாளிக்க -
  1. நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. காயத்தூள் - 1/4 தேக்கரண்டி 
  4. மிளகாய்வத்தல் - 1
  5. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. முதலில் பச்சை வேர்க்கடலையை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. ஊறிய பிறகு அதனுடன் உப்பு சேர்த்து குக்கரில் வைத்து 2 விசில் வரை வைத்து வேக வைத்து தண்ணீரை வடித்து வைக்கவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய் வத்தல், கடுகு போடவும். 
  4. கடுகு வெடித்தவுடன் காயத்தூள், கறிவேப்பிலை, அவித்து வைத்துள்ள வேர்கடலையை சேர்த்து கிளறவும். உப்பு சரி பார்த்து தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக் கொள்ளவும்.
  5. இறுதியில் தேங்காய் துருவலை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். சுவையான வேர்க்கடலை சுண்டல் ரெடி.                                                

Friday, April 25, 2014

எங்கள் வீட்டுத் தோட்டத்தில் செம்பருத்திப்பூ

                 

எங்கள் வீட்டு செம்பருத்தி செடியில் பூத்திருக்கும் பூக்களை  பாருங்கள்!

ஒரு வருடத்திற்கு முன்னால் செம்பருத்தி செடி ஓன்று வாங்கி வைத்து நல்ல முறையில் தண்ணீர் ஊற்றியும், உரமும் போட்டு வளர்த்து வந்தோம். ஆனால் என்னவோ முதலில் பூக்கவே இல்லை. ஆனால் செடி நன்றாக இருந்தது. பிறகு தண்ணீரும் ஊற்றி பசுவின் சாணமும் போட்டு வந்தேன்.

ஒரு நாள் திடீரென்று இரண்டு மொட்டுக்கள் இருந்தது. எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பிறகு இரண்டு பூக்களாக மலர்ந்தது.

இப்போது நிறைய பூக்கள் பூத்து குலுங்குகிறது. அதில் ஒரு பகுதியை போட்டோ எடுத்து போட்டிருக்கிறேன். நீங்களும் பாருங்கள்!     
       
செம்பருத்திப்பூவால் நிறைய நன்மைகள் உண்டு. சாமிப்படங்களுக்கு வைத்து பூஜை பண்ணலாம். தேங்காய் எண்ணையில் செம்பருத்திப்பூக்களை போட்டு காய்ச்சி தலைக்கு தேய்க்கலாம். முடி நன்றாக வளரும். தண்ணீரை சுட வைத்து அதில் 5 பூக்கள் வீதம் போட்டு வடிகட்டி குடித்தால் இதயம் நன்கு வலுப்படும். இதே போல் பாலிலும் போட்டு வடிகட்டி குடிக்கலாம். நீங்களும் முயற்ச்சி செய்து பாருங்கள். கண்டிப்பாக பலன் கிடைக்கும்.

நன்றி
சாரதா

மாங்காய் ஊறுகாய் / Mango Pickle

தேவையான பொருள்கள் -
  1. மாங்காய் - 3
  2. மிளகாய்த் தூள் - 3 மேஜைக்கரண்டி 
  3. காயத்தூள் - 1 தேக்கரண்டி 
  4. வெந்த்தயத் தூள் - 1 தேக்கரண்டி 
  5. கல் உப்பு - தேவையான அளவு                  
தாளிக்க -
  1. நல்லெண்ணெய் - 50 மில்லி 
  2. கடுகு - 2 தேக்கரண்டி 
செய்முறை -
  1.  முதலில் மாங்காய்களை நன்கு கழுவி துடைத்து பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. ஒரு பிளாஸ்டிக் டப்பா அல்லது ஒரு ஜாடியில் போட்டு அதனுடன் தேவையான அளவு கல் உப்பு சேர்த்து மூன்று நாட்கள் வரை ஊற வைக்கவும்.        
  3. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று தடவை நன்றாக குலுக்கி விடவும்.                           
  4. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் மிளகாய்த் தூள், காயத்தூள், வெந்தயத்தூள் சேர்த்து  ஒரு நிமிடம் கிளறி அடுப்பை அணைக்கவும். அதை சிறிது நேரம் ஆற விடவும்.
  5. ஆறிய பிறகு மாங்காயோடு சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்கவும்.
  6. இதை சேர்த்த பிறகு மறுபடி மூன்று நாள் ஊற வைக்கவும். அதே மாதிரி ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று தடவை குலுக்கி விடவும்.              
  7. பிறகு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் எடுத்து ஊறுகாயின் மேல் ஊற்றி நன்றாக கலக்கி ஒரு காற்றுப் புகாத பாட்டிலில் எடுத்து வைக்கவும். சுவையான மாங்காய் ஊறுகாய் ரெடி. தயிர் சாதத்துடன் சேர்த்து  சாப்பிடலாம்.                                            

Wednesday, April 23, 2014

வேர்க்கடலை சட்னி / Peanut chutney

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பச்சை வேர்க்கடலை - 50 கிராம் 
  2. தேங்காய் துருவல் - 50 கிராம் 
  3. மிளகாய் வத்தல் - 1
  4. பச்சை மிளகாய் -1
  5. பூண்டுபல் - 2
  6. உப்பு - தேவையான அளவு                        
தாளிக்க -
  1. நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
  4. காயத்தூள் - சிறிது 
  5. கறிவேப்பில்லை - சிறிது 
செய்முறை -
  1. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் வேர்க்கடலையை போட்டு வறுத்துக் கொள்ளவும். அடுப்பை அணைத்து விட்டு வேர்க்கடலையை சிறிது நேரம் ஆற விடவும்.                                
  2. ஆறியவுடன் தோலுரித்துக் கொள்ளவும்.            
  3. பிறகு அதனுடன் மிளகாய்வத்தல், பச்சைமிளகாய், தேங்காய்துருவல், பூண்டு, உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸ்சியில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.                                         
  4. அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானவுடன் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம்பருப்பு, காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் ஊற்றி கலக்கவும்.
  5. சுவையான வேர்க்கடலை சட்னி ரெடி. இட்லி,தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம்.

Thursday, April 17, 2014

மாங்காய் பச்சடி / Mango pachadi

                     
பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. மாங்காய் - 1
  2. சாம்பார் பொடி - 1 மேஜைக்கரண்டி 
  3. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி 
  4. சீனி ( சர்க்கரை ) - 2 மேஜைக்கரண்டி 
  5. உப்பு - தேவையான அளவு                         
அரைக்க -
  1. தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி 
தாளிக்க -
  1. நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. வெங்காயம் - 1/4 பங்கு 
  4. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. முதலில் மாங்காயை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து மாங்காய் துண்டுகள் மற்றும் அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி வேக விடவும்.                                                    
  3. நன்கு வெந்தவுடன் மத்து அல்லது கரண்டி கொண்டு நன்றாக மசிக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து சாம்பார்பொடி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து  மிதமான சூட்டில் வைத்து கொதிக்க விடவும்.                                              
  4. மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து கெட்டியாகும் வரை வைத்திருக்கவும். 
  5. இறுதியில் சீனியை சேர்த்து நன்றாக கலக்கி அடுப்பை அணைக்கவும். பச்சடியை பாத்திரத்திற்கு மாற்றி விடவும்.                                            
  6. அடுப்பில் அதே கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். 
  7. வெங்காயம் பொன்னிறமானதும் பச்சடியில் ஊற்றி கலக்கி விடவும். சுவையான மாங்காய் பச்சடி ரெடி.                                                                                                          

ஓட்ஸ் பாயாசம் / Oats Payasam

தேவையான பொருள்கள் -
  1. ஓட்ஸ் - 100 கிராம் 
  2. சீனி - 150 கிராம் 
  3. பால் - 300 மில்லி 
  4. முந்திரிப் பருப்பு - 10
  5. காய்ந்த திராட்சை - 10
  6. நெய் - 2 மேஜைக்கரண்டி 
  7. ஏலக்காய்தூள் - 1/2 தேக்கரண்டி                 
செய்முறை -
  1. கடாயில் ஒரு மேஜைக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் ஓட்ஸைப் போட்டு லேசாக வறுத்து தனியாக வைக்கவும். அதே கடாயில் மீதமுள்ள ஒரு மேஜைக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் முந்திரிப்பருப்பு, திராட்சையை போட்டு வறுத்துக் கொள்ளவும்.
  2. அடுப்பில் ஒரு அடிக்கனமான பாத்திரத்தில் 300 மில்லி பாலை ஊற்றி கொதிக்க விடவும். கொதித்ததும் ஓட்ஸைப் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து சிறிது நேரம் விடாமல் கலக்கிக் கொண்டே இருக்கவும்.                                                       
  3. ஓட்ஸ் வெந்ததும் சீனியை சேர்த்து சீனி கரையும் வரை நன்றாக கலக்கி விடவும்.
  4. இறுதியில் முந்திரிப்பருப்பு, திராட்சை, ஏலகாய்தூளை சேர்த்து கலக்கி அடுப்பை அணைக்கவும். சுவையான ஓட்ஸ் பாயசம் ரெடி.                                    

இட்லி பிரை / Idli Fry

தேவையான பொருள்கள் -
  1. இட்லி - 3
  2. மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி 
  3. கறிமசால் பொடி - 1/2 தேக்கரண்டி 
  4. உப்பு - சிறிது 
  5. பொரிப்பதற்கு எண்ணைய் - 100 மில்லி          
செய்முறை -
  1. இட்லியை சதுர துண்டுகளாக வெட்டி அதன் மேல் மிளகாய்த்தூள், கறிமசால் பொடி, உப்பு எல்லாவற்றையும் சேர்த்து கலந்து வைக்கவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணைய்  ஊற்றி சூடானதும் கலந்து வைத்துள்ள இட்லி துண்டுகளை கடாய் கொள்ளும் அளவுக்கு போட்டு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து பொரித்து எடுக்கவும்.                                                                                                
  3. சுவையான இட்லி ப்ரை ரெடி. இட்லி மீந்து போய்விட்டால் இந்த ரெசிபியை செய்து பார்க்கவும்.

மெது பக்கோடா / Methu Pakoda



தேவையான பொருள்கள் -
  1. கடலைமாவு - 100கிராம் 
  2. அரிசி மாவு - 50 கிராம் 
  3. வெண்ணெய் - 2 மேஜைக்கரண்டி 
  4. சோடா உப்பு - 1/2 தேக்கரண்டி 
  5. பெரிய வெங்காயம் - 1
  6. பச்சை மிளகாய் - 2
  7. இஞ்சி - ஒரு சிறிய துண்டு 
  8. பூண்டுப்பல் - 6
  9. கறிவேப்பிலை - சிறிது 
  10. உப்பு - தேவையான அளவு 
  11. சுடுவதற்கு எண்ணைய் - 200 கிராம்          
செய்முறை -
  1. வெங்காயத்தை  மெலிதாக வெட்டி வைக்கவும். பச்சை மிளகாயை பொடிதாக நறுக்கி வைக்கவும். இஞ்சி, பூண்டு இரண்டையும் சேர்த்து ஒன்றிரண்டாக தட்டி வைக்கவும். கறிவேப்பிலையை பொடிதாக நறுக்கி வைக்கவும்.                      
  2. பிறகு ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வெண்ணையை போட்டு கையால் நன்றாக பிசைந்து வைக்கவும்.
  3. பிறகு உப்பு, சோடா உப்பு, நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தட்டி வைத்துள்ள இஞ்சி, பூண்டு, கடலைமாவு, அரிசிமாவு, நறுக்கி வைத்துள்ள வெங்காயம் இவற்றுடன் ஒரு கை தண்ணீர் தெளித்து பிசையவும்.
  4. தண்ணீர் தேவைப்பட்டால் இன்னும் சிறிது தண்ணீர் சேர்த்து மாவுக்கலவையை கொஞ்சம் தளர்வாக பிசைந்து கொள்ளவும்.                                  
  5. அடுப்பில் கடாயை வைத்து எண்ணைய் ஊற்றி சூடானதும் மாவுக் கலவையை சிறிதாக எடுத்து  உருட்டாமல் கடாய் கொள்ளும் அளவுக்கு போடவும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு சிவந்ததும் எடுத்து விடவும்.                                                               

  6. மீதமுள்ள மாவுக் கலவையையும் இதே போல் சுட்டு எடுத்து டிஸ்யு பேப்பரில் வைக்கவும். எண்ணைய் நன்கு உறிஞ்சியவுடன் ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு வைக்கவும். சுவையான மெது பக்கோடா ரெடி.           

காணப்பொடி / Horse Gram Podi

                             

தேவையான பொருள்கள் -
  1. காணம் - 100 கிராம் 
  2. மிளகாய் வத்தல் - 6
  3. காயத்தூள் - 1/2 தேக்கரண்டி 
  4. பூண்டு - 10 பற்கள் 
  5. கறிவேப்பிலை - சிறிது 
  6. உப்பு - தேவையான அளவு                        
செய்முறை -
  1. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் காணம் சேர்த்து லேசாக சிவக்க வறுக்கவும். அதை தனியாக எடுத்து வைத்து விட்டு அதே கடாயில் மிளகாய் வத்தலை போடவும்.
  2. மிளகாய் வத்தல் நன்கு வறுபட்டதும் காயத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி அதை தனியாக எடுத்து வைக்கவும். 
  3. அடுப்பை அணைத்து விட்டு சூடாக இருக்கும் அதே கடாயில் கறிவேப்பிலையை போட்டு வறுத்துக் கொள்ளவும்.                                              
  4. பிறகு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து சிறிது நேரம் ஆற விடவும். பூண்டை தோலுரித்து வைக்கவும். 
  5. ஆறியவுடன் வறுத்த பொருட்கள் மற்றும் பூண்டு சேர்த்து மிக்ஸ்சியில் நன்றாக திரித்துக் கொள்ளவும். அதை ஒரு பேப்பரில் பரப்பி நன்கு ஆற விடவும்.
  6. ஆறிய பின் ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு மூடி வைக்கவும். சுவையான காணப்பொடி ரெடி. இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம்.

Friday, April 11, 2014

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

                                       
                                                                                                       

உங்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

தமிழ் புத்தாண்டு என்பது சித்திரை மாதத்தின் முதல் நாளை கொண்டாடும் விழாவாகும்.

தமிழ் புத்தாண்டு அன்று அனைவரும் காலையில் எழுந்து நீராடி வீட்டில் விளக்கேற்றி  வணங்கி விட்டு பிறகு கோவிலுக்கும் சென்று வருவார்கள்.

எல்லோரும் இந்த தமிழ் புத்தாண்டில் எல்லாம் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையில் அன்று முழுவதும் மிக்க மகிழ்ச்சியாக இருப்பார்கள். எல்லோருடைய வீட்டிலும் மதிய சாப்பாடு மிகவும் பிரமாதமாக இருக்கும். இனிப்பு, புளிப்பு, கசப்பு என்ற சுவைகளில் வைத்து அசத்துவார்கள். சர்க்கரை பொங்கல், மாங்காய் பச்சடி, பாகற்க்காய் பொரியல் என்று வைப்பார்கள். சில வீடுகளில் கசப்பு சுவைக்கு வேப்பம் பூ ரசம் வைப்பார்கள்.

நம்முடைய வாழ்க்கையும் இனிப்பு, புளிப்பு, கசப்பு எல்லாம் கலந்த கலவை என்பதை நாம் உணர்ந்து அதை நாம் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் நமக்கு வேண்டும் என்பதே இதன் பொருளாகும்.

இதை தவிர முருங்கைக்காய், மாங்காய், தக்காளி சேர்த்து செய்த சாம்பார், அவியல், வடை எல்லாம் செய்து குடும்பத்தினர் அனைவரும் மிகிழ்ச்சியாக சாப்பிடுவார்கள்.

எங்கள் ஊரான பாளை பகுதியில் அவலை பாலில் ஊற வைத்து அதனுடன் தேங்காய் துருவல்.சீனி சேர்த்து செய்த அவலை சாமிக்கு படைத்து கும்பிடுவார்கள்.

எல்லோரும்  அவரவர் விருப்பப்படி சுவையாக சமைத்து தமிழ் புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்!

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் -

  1. சாம்பார்
  2. அவியல்
  3. சர்க்கரை பொங்கல்
  4. உளுந்த வடை
  5. கேசரி
  6. மாங்காய் தொக்கு
Related Posts Plugin for WordPress, Blogger...