Friday, May 30, 2014

சீடை / Seedai

  1. இட்லி அரிசி - 2 கப் ( 400 கிராம் )
  2. பாதியாக உடைத்த வெள்ளை உளுந்தம் பருப்பு - 100 கிராம் 
  3. பொட்டுக்கடலை - 50 கிராம் 
  4. வெண்ணெய் - 25 கிராம் 
  5. தேங்காய் துருவல் - 200 கிராம் 
  6. எள் - 2 மேஜைக்கரண்டி 
  7. சீரகம் - 2 மேஜைக்கரண்டி 
  8. உப்பு - தேவையான அளவு 
  9. சுடுவதற்கு எண்ணைய் - தேவையான அளவு 
செய்முறை -
  1. அரிசியை நன்றாக கழுவி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பின் அரிசியுடன் உப்பு சேர்த்து கிரைண்டரில் இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் தீயை சிம்மில் வைத்து உளுந்தம் பருப்பை போட்டு லேசாக வறுத்து சிறிது நேரம் ஆற விடவும்.
  3. ஆறிய பின் மிக்ஸ்சியில் திரித்துக் கொள்ளவும். பொட்டுக்கடலையையும் மிக்ஸ்சியில் திரித்துக் கொள்ளவும்.
  4. தேங்காய் துருவலை மிக்ஸ்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
  5. பிறகு அரைத்து வைத்துள்ள அரிசி மாவோடு உளுந்த மாவு, பொட்டுக்கடலை மாவு, தேங்காய் துருவல், வெண்ணைய், எள், சீரகம் சேர்த்து கெட்டியாக பிசைந்து வைக்கவும்.
  6. பிறகு மாவை கொஞ்சம் எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெய் தடவிய தட்டில் வைக்கவும். ரொம்ப உருட்டாமல் லேசாக உருட்டி போடவும். மீதமுள்ள எல்லா மாவையும் இதே போல் உருட்டி போடவும்.
  7. அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணைய் ஊற்றி சூடானதும் மிதமான சூட்டில் வைத்து கடாய் கொள்ளும் அளவுக்கு சீடைகளை எடுத்து போடவும்.
  8. சீடைகள் பொன்னிறமானதும் எடுத்து வடிதட்டில் போடவும்.
  9. எண்ணெய் நன்கு வடிந்தவுடன் சீடைகளை எடுத்து காற்றுப்புகாத பாட்டில் அல்லது டப்பாவில் எடுத்து வைக்கவும். சுவையான சீடை ரெடி.

Thursday, May 29, 2014

சிக்கன் தம் பிரியாணி / Chicken Dum Biriyani

   
பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருட்கள் -
  1. பெரிய வெங்காயம் - 1
  2. பொடிதாக நறுக்கிய கொத்தமல்லி தழை மற்றும் புதினா - 1/4 கப்
  3. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
  4. நெய் - 1 மேஜைக்கரண்டி
ஊற வைப்பதற்கு -
  1. எலும்புடன் உள்ள பெரிய சிக்கன் துண்டுகள் - 250 கிராம்
  2. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 மேஜைக்கரண்டி
  3. மிளகாய் பொடி - 1 மேஜைக்கரண்டி
  4. மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி
  5. சீரகப் பொடி - 1 மேஜைக்கரண்டி
  6. மல்லிப் பொடி - 1 மேஜைக்கரண்டி
  7. கரம் மசாலா பொடி - 1 தேக்கரண்டி
  8. தயிர் - 2 மேஜைக்கரண்டி
  9. எலுமிச்சை சாறு - 1 மேஜைக்கரண்டி
  10. நறுக்கிய பச்சை மிளகாய் - 2
  11. பொடிதாக நறுக்கிய கொத்தமல்லி தழை மற்றும் புதினா - 1/4 கப்
  12. பட்டை - 1
  13. கிராம்பு - 2
  14. உப்பு - தேவையான அளவு
  15. எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
சாதம் வடிக்க -
  1. பாஸ்மதி அரிசி - 2 கப்
  2. உப்பு - தேவையான அளவு
  3. பட்டை - 1
  4. கிராம்பு - 5
  5. ஏலக்காய் - 3
  6. பிரிஞ்சி இலை - 2
  7. எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
செய்முறை -
  1. சிக்கனை கழுவி நன்றாக தண்ணீரை வடித்து விட்டு ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து குறைந்தது 3 மணி நேரம் ஊற வைக்கவும். அல்லது பிரிட்ஜில் முந்துன நாள் இரவே ஊற வைக்கவும்.                     
  2. பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி 30 நிமிடம் ஊற வைக்கவும்.
  3. வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கிக் கொள்ளவும். ஒரு கடாயில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை நன்றாக ப்ரை செய்யவும். பிரவுன் கலராக வரும் வரை ப்ரை செய்யவும். அல்லது கடையில் கிடைக்கும் ரெடிமேட் பிரைட் ஆனியனை உபயோகபடுத்தலாம்.
  4. ஒரு பாத்திரத்தில் 5 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கொதித்ததும் உப்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, எண்ணெய் சேர்க்கவும். உப்பு சரி பார்த்து விட்டு அரிசியை போடவும். அரிசி 70% வெந்ததும் அதை வடித்து விடவும். 
  5. பட்டை, கிராம்பை அதிகமாக விரும்பாதோர் சாதத்தை வடித்ததும் அதிலிருக்கும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் அனைத்தையும் எடுத்து விடவும்.
  6. ஓவனை 400 F-ல் (200 C) சூடு பண்ணவும். ஒரு பெரிய மூடி கொண்ட அகலமான அடிகனமான கடாயை எடுத்து கொள்ளவும். 2 மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டுக் கொள்ளவும். பிறகு ஊற வைத்த சிக்கன் மற்றும் மசாலா கலவையை சேர்த்து பரப்பி விடவும்.            
  7. பிறகு வடித்த சாதத்தை சேர்த்து அதன் மேல் ப்ரை செய்த வெங்காயம், கொத்தமல்லி மற்றும் புதினா சேர்க்கவும். ஒரு மேஜைக்கரண்டி நெய்யை பரப்பி ஊற்றவும்.
  8. பிறகு அலுமினியம் பாயில் போட்டு மூடியை போடவும். டைட்டாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மூடியை போட்டு சப்பாத்தி மாவை சுற்றி ஒட்டி விட வேண்டும்.
  9. 400 F -ல் 30 நிமிடம் வைக்கவும். அதன் பிறகு 300 F -ல் (150 C) 30 நிமிடம் வைத்து ஓவனில் இருந்து எடுத்து விடவும். ஒரு 15 நிமிடம் கழித்து மூடியை திறந்து மெதுவாக கிளறி பரிமாறவும்.                                                                                     
குறிப்புகள் -
  1. ஓவன் இல்லாவிட்டால் அடுப்பில் கடாயை வைத்து தீயை high-ல் வைக்கவும். 5 நிமிடம் கழித்து கடாயை எடுத்து விட்டு ஒரு கனமான தோசை கல்லை வைக்கவும். மிதமான தீயில் வைத்துக் கொள்ளவும். தோசை கல்லின் மீது கடாயை வைத்து 40 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும். 15 நிமிடம் கழித்து கடாயை திறந்து மெதுவாக கிளறவும்.

Monday, May 19, 2014

சாளைமீன் குழம்பு - 2 / Challa Fish Curry / Sardine Fish Curry

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. சாளை மீன் - 8
  2. மாங்காய் துண்டுகள் - 4 
  3. தக்காளி -1
  4. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி 
  5. மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி 
  6. சீரகத்தூள் - 1 தேக்கரண்டி 
  7. மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி 
  8. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி 
  9. புளி - கோலி அளவு 
  10. உப்பு - தேவையான அளவு                        
அரைக்க -
  1. தேங்காய் துருவல் - 5 மேஜைக்கரண்டி 
  2. சின்ன வெங்காயம் -  6                              
தாளிக்க -
  1. நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. சின்ன வெங்காயம் - 4
  5. வெந்தயம் - 1/2 தேக்கரண்டி - 
  6. கறிவேப்பிலை - சிறிது                              
செய்முறை -
  1. தக்காளியை பொடிதாகவும், வெங்காயத்தை நீளவாக்கிலும் நறுக்கி வைக்கவும். புளியை 200 மில்லி தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்..
  2. அரைக்க கொடுத்தவற்றை மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.

  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெந்தயம், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  4. வெங்காயம் பொன்னிறமானதும், நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கவும்.
  5. தக்காளி சுருள வதங்கியதும் புளித்தண்ணீர், மாங்காய் துண்டுகள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  6. மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து கொதிக்க விடவும்.
  7. பிறகு மீன்களை சேர்த்து வேகும் வரை கொதிக்க விடவும்.          
  8. மீன் நன்கு வெந்ததும் உப்பு சரி பார்த்து அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான சாளை மீன் குழம்பு ரெடி 
சாளை மீன் குழம்பு - 1 பார்க்க இங்கே கிளிக் பண்ணவும்.

Friday, May 9, 2014

அன்னையர் தினம் / Mother's Day

உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்னையர் தின வாழ்த்துக்கள்! இந்த வருடம் மே 11  அன்னையர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

                            அன்னையிடம் ஆசி பெற்று  அவளுக்கு பரிசு தந்து                      
                 
                            இன்று முழுவதும் அவளுடன்  இருக்க வேண்டும்
                             
                            பத்து மாதம் சுமந்து பெற்று பாதுகாத்து வளர்த்து

                            இந்த சமுதாயத்தில் நீந்த கற்றுத் தந்தவள் தாய்!

ஒரு வீட்டில் தெய்வம் இருக்கிறது என்றால் அது வீட்டில் இருக்கும் தாய்தான்!

தாயிற் சிறந்த கோவிலுமில்லை என்ற வரிகளுக்கு ஏற்ற படி ஒரு பெண் சகோதரியாக, தாரமாக, மகளாக, தோழியாக, பாட்டியாக என்று எத்தனையோ பாத்திரங்களில் வலம் வந்தாலும் அன்னை என்ற பாத்திரம் தான் முதல் இடத்தை வகிக்கிறது.

அம்மா என்றால் அன்பு! அந்த அன்பை தன்னுடைய குழந்தைக்கு அள்ளி அள்ளித் தருகிறாள்.

எனவே இந்த அன்னையர் தின நன்னாளில் நாம் அனைவரும் அன்னையைப்  போற்றி வணங்குவோம்!
                                               

Tuesday, May 6, 2014

தனிமை உங்களை வாட்டுகிறதா.....?

                               

இன்றைய நாகரீக உலகில் 6 வயது முதல் 60 வயது வரை கணினியில் பேஸ்புக், டிவிட்டர் போன்ற இளைய தளங்களில் மூழ்கி இருக்கிறார்கள். கணினியில் உலகமே உள்ளங்கையில் இருப்பதால் தனிமை என்று ஓன்று இருப்பதை மறந்து கணினியோடு சிலர் பொழுதை கழித்து விடுகிறார்கள்.

தனிமை இரண்டு வகைப்படும். ஓன்று நம் சந்தோஷத்திற்காக நாமே தனிமையை விரும்பும் போது அந்த தனிமை நமக்கு இனிமையை கொடுக்கும். கடவுளை வணங்க, நல்ல கவிதையை வாசிக்க தனிமை அவசியம்.

தனிமை நம்மை தானாக தேடி வருவது இரண்டாவது வகையாகும். வாழ்க்கையில் ஏமாற்றம், துரோகம் என்று ஏதாவது ஒரு காரணத்தால் மன வேதனைக்குள்ளாகி தனிமையை சந்தித்து அதனால் ஏற்ப்படும் இந்த தனிமை நமக்கு கசப்பை கொடுக்கும். சிலர் மன உளைச்சலுக்கு கூட ஆளாவது உண்டு. இவர்கள் நாம் இனி யாரையும் நம்ப வேண்டாம் என்றும், பிறருடன் சேர்ந்து பாதிக்கப்படுவதை விட நாம் தனியாக நிம்மதியாக இருக்கலாம் என்று நினைப்பார்கள்.                                                               
இந்த முடிவு நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்து வராது. இந்த தனிமை வாழ்க்கை ஒரே நாளில் வெறுத்து விடும். எனவே தனிமையை மறக்க  உங்களுக்கு உபயோகப்படும் வகையில் பொழுதுபோக்கு விஷயங்களை மாற்றி அமைக்கலாம். காலையில் எழுந்ததும் உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்து மனநிலையை நல்லபடியாக வைத்துக் கொள்ளலாம்.

எனவே இந்த சிக்கலான தனிமை வாழ்க்கையிலிருந்து விடுபட முதலில் நம் வீட்டிலுள்ள்ள அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நமக்கு வேண்டிய சந்தோஷம் நம் வீட்டிலேயே கிடைக்கும். பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் மனம் விட்டு பேசினால் எளிதாக தீர்ந்து விடும். எல்லா விஷயங்களையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டால் தான் வாழ்க்கை இனிமையாக இருக்கும். தனிமை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய் விடும்.

எல்லோரும் மனதை ஒருநிலைப் படுத்திக்கொண்டு தனிமை என்ற சொல்லை மறந்து குடும்பத்தினர், உறவினர்கள், சிநேகிதர்கள் என்று எல்லோரிடமும் இனிமையாக பேசி வாழ்ந்தால் ஆயுளும் நீடிக்கும். வீடும் சொர்க்கமாக மாறி விடும்.

எனவே தனிமை வாழ்க்கையை மறந்து கூடி வாழ்ந்து கோடி நன்மைகளை பெறுவோம்!

நன்றி
சாரதா

Friday, May 2, 2014

முள்ளு முறுக்கு / Mullu Murukku

தேவையான பொருள்கள் -
  1. அரிசி மாவு - 1 கப் ( 200 கிராம்)
  2. கடலை மாவு - 1/2 கப் ( 100 கிராம்)
  3. வெண்ணெய் - 2 மேஜைக்கரண்டி 
  4. கறுப்பு எள் - 1 மேஜைக்கரண்டி 
  5. சீரகம் - 1 தேக்கரண்டி 
  6. உப்பு - தேவையான அளவு 
  7. சுடுவதற்கு எண்ணைய் - தேவையான அளவு
செய்முறை -
  1. முதலில் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வெண்ணையை போட்டு கையால் பிசைந்து கொள்ளவும்.
  2. பிறகு அதனுடன் பச்சரிசிமாவு, கடலைமாவு, எள், சீரகம், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும். பிறகு அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து வைக்கவும்.                                                                          
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணைய் ஊற்றி சூடானதும் மிதமான சூட்டில் தீயை வைத்துக் கொள்ளவும்.
  4. முறுக்கு குழலின் உள்ளே சிறிது எண்ணெய் தடவி கொள்ளவும். முள்ளு முறுக்கு அச்சை போட்டு தேவையான அளவு மாவை உள்ளே வைத்துக் கொள்ளவும்.
  5. ஒரு கரண்டியின் பின்புறம் முறுக்கை சிறு வட்டமாக பிழிந்து அதை அப்படியே எண்ணெயில் மெதுவாக போடவும்.                                                
  6. அல்லது பாலிதீன் கவிரில் முறுக்குகளை பிழிந்து வைத்துக் கொண்டு ஒவ்வொன்றாக போடவும்.
  7. ஒருபுறம் வெந்ததும் முறுக்குகளை திருப்பி போடவும். இரண்டு புறமும் பொன்னிறமானதும் முறுக்குகளை எடுத்து ஒரு வடிதட்டில் வைக்கவும்.          
  8. மீதமுள்ள எல்லா மாவையும் இதே முறையில் சுட்டு எடுக்கவும். சுவையான முள்ளு முறுக்கு ரெடி.
Related Posts Plugin for WordPress, Blogger...