Thursday, July 30, 2015

மாம்பழ மில்க் ஷேக் / Mango Milk Shake


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பழுத்த மாம்பழம் - 3
  2. குளிர்ந்த பால் - 200 மில்லி 
  3. சீனி - 4 மேஜைக்கரண்டி அல்லது தேவையான அளவு 
செய்முறை -
  1. மாம்பழங்களை நன்கு கழுவி தோல் சீவி பொடிதாக நறுக்கி வைக்கவும்.
  2. மிக்ஸ்சியில் நறுக்கிய மாம்பழங்களுடன் சீனியும் சேர்த்து ஒரு சுற்று சுற்றவும். மாம்பழம் நன்கு மசிந்து விடும். பிறகு அதனுடன் பால் சேர்த்து அரைக்கவும். 
  3. பிறகு கிளாசில் ஊற்றி பரிமாறவும். சுவையான மாம்பழ மில்க் ஷேக் ரெடி.

Wednesday, July 22, 2015

ஆடி மாதத்தின் சிறப்புகள் / Aadi Month Special



ஆடி மாதத்தின் சிறப்பை பற்றி ஒரு சிறிய பதிவு -

தமிழ் மாதங்கள் 12 ஆகும். ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. சில மாதங்களுக்கு பழமொழியும் உண்டு. ஆடி மாதத்திற்கு ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழி இருக்கிறது.

இந்த வருடம் ஜூலை மாதம் 17 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிறந்துள்ளது. ஆடி மாதத்தில் சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பயணமாவதாக சொல்லப்படுகிறது. காற்றும், மழையும் அதிகமாக இருக்கும்.
ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் மிகவும் சிறப்பு வாய்ந்ததது.
ஆடி செவ்வாய் கிழமைகளில் அம்மனை வழிபட்டு வந்தால் பெண்களின் மாங்கல்ய பலம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது.
                                                                                                                         
ஆடி மாதம் என்றாலே அம்மன் கோவில்களில் திருவிழாவும், கூழ் ஊற்றுதலும், தீ மிதித்தலும் என்று களை கட்டும்.

ஆடி அமாவாசையில் குடும்பத்தின் முதியோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டால் நமக்கு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையும் இருந்து வருகிறது.

ஆடி 18 ஆம் தேதி ஆடிப்ருக்கு விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தண்ணீர் அதிகமாக வரும் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஆடித்தபசு விழா எல்லா சிறப்புகளுக்கும் சிறப்பு சேர்க்கும் விழாவாக கொண்டாடப்படுகிறது. ஆடித்தபசு அன்று கோமதி அம்மன் கோவிலில் கூட்டம் அதிகமாக இருக்கும்.

ஆடி மாதத்தில் மற்றொரு சிறப்பான செய்தி ஜவுளிக்கடைகளில் விற்பனை செய்யும் ஆடித்தள்ளுபடி ஆகும். எல்லா ஜவுளிக்கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். புடவைகள், சுடிதார்கள் என்று எல்லாவற்றுக்கும் விலையில் தள்ளுபடி செய்து கொடுப்பார்கள்.
                           
இது பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுக்கும். குடும்பத்தினருடன், உறவினர்களுடன், தோழிகளுடன் என்று கடைகளுக்கு சென்று வேண்டியதை வாங்கி வருவார்கள்.

இவ்வாறாக ஆடி மாத விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

நன்றி
சாரதா 

Monday, July 20, 2015

வெஜ் குருமா / Veg Kuruma


தேவையான பொருட்கள் -
  1. பெரிய வெங்காயம் - 1
  2. தக்காளி - 1
  3. கேரட் - 1
  4. பச்சை பட்டாணி - 50 கிராம் 
  5. காலிபிளவர் - 100 கிராம் 
  6. இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி 
  7. கொத்தமல்லி பொடி - 1 மேஜைக்கரண்டி 
  8. சீரக தூள் - 1 மேஜைக்கரண்டி 
  9. மிளகாய் பொடி - 1 மேஜைக்கரண்டி 
  10. மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி 
  11. கரம் மசாலா பொடி - 1 மேஜைக்கரண்டி 
  12. எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி 
  13. கறிவேப்பிலை - சிறிது 
  14. உப்பு - தேவையான அளவு
அரைக்க -
  1. தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி 
  2. சோம்பு - 1 மேஜைக்கரண்டி 
  3. முந்திரி பருப்பு - 6
செய்முறை -
  1. வெங்காயம், தக்காளி, கேரட், காலிபிளவர் எல்லாவற்றையும் பொடிதாக வெட்டி வைக்கவும்.
  2. அரைக்க கொடுத்துள்ளவற்றை மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  4. வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பச்சை வாடை போனதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  5. தக்காளி வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து கிளறவும். அதனுடன் உப்பு, மிளகாய் பொடி, மல்லிப்பொடி, சீரகப்பொடி, மஞ்சள்பொடி சேர்த்து கிளறவும்.
  6. பிறகு அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். 
  7. காய்கறிகள் நன்கு வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவை மற்றும் கரம் மசாலா சேர்க்கவும். தேவைபட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
  8. எல்லாம் நன்கு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். சுவையான வெஜ் குருமா ரெடி. சப்பாத்தி, பரோட்டாவுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

Thursday, July 16, 2015

முட்டை ஆம்லெட் / Egg Omlette / Garden Omlette

பரிமாறும் அளவு - 3 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. முட்டை - 3
  2. துருவிய சீஸ் - 2 மேஜைக்கரண்டி 
  3. மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி 
  4. குட மிளகாய் - 2 மேஜைக்கரண்டி
  5. தக்காளி - 2 மேஜைக்கரண்டி
  6. பெரிய வெங்காயம் - 2 மேஜைக்கரண்டி
  7. எண்ணெய் -  3 மேஜைக்கரண்டி
  8. உப்பு - தேவையான அளவு
செய்முறை -
  1. மூன்று முட்டைகளையும் உடைத்து ஒரு பௌலில் ஊற்றி அதனுடன் மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு நுரைவரும்படி கலக்கி வைக்கவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், குட மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  3. பாதி வதங்கியதும் அதன் மேல் கலக்கி வைத்துள்ள முட்டையை ஊற்றவும். 
  4. அடுப்பை சிம்மில் வைத்து மூடி வைக்கவும். இந்த ஆம்லெட்டை திருப்பி போட்டு வேக வைக்க போவதில்லை. அதனால் மூடி போட்டு வேக விடவும்.
  5. நடுவில் வேகாமல் இருந்தால் கடாயை எடுத்து ஒரு சுற்று சுற்றவும். இப்படி செய்வதால் நடுவில் வேகாமல் இருக்கும் முட்டை கடாயில் ஓரமாக வந்து சீக்கிரமாக வெந்து விடும்.
  6. கடைசியாக சீஸை சுற்றி போடவும். ஒரு நிமிடம் கழித்து சீஸ் உருகியதும் அடுப்பை அணைக்கவும். 
     
  7.  பிறகு பாதியாக மடித்து எடுத்து தட்டில் வைக்கவும். சுவையான முட்டை ஆம்லெட் ரெடி. கட் செய்து பரிமாறவும். பிரெட்டுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

Monday, July 13, 2015

சிக்கன் குழம்பு / Chicken Gravy with Coconut milk


பரிமாறும் அளவு - 3

தேவையன பொருட்கள் -
  1. எலும்புடன் உள்ள சிக்கன் - 1/4 கிலோ
  2. பெரிய வெங்காயம் - 1
  3. தக்காளி - 1
  4. இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
  5. மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி 
  6. கொத்தமல்லி பொடி - 1 மேஜைக்கரண்டி 
  7. சீரக பொடி - 1 மேஜைக்கரண்டி 
  8. ஆச்சி சிக்கன் மசாலா பொடி - 1 மேஜைக்கரண்டி 
  9. தேங்காய் பால் - 250 ml
  10. உப்பு - தேவைக்கேற்ப 
  11. கொத்தமல்லி தழை - சிறிது
தாளிக்க -
  1. நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. பட்டை - 1
  3. கிராம்பு - 2
  4. கறிவேப்பில்லை - சிறிது 
சிக்கனை ஊற வைக்க -
  1. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  2. மிளகாய் தூள் - 1/2 மேஜைக்கரண்டி
  3. உப்பு - தேவைக்கேற்ப 
செய்முறை -
  1. சிக்கனை நன்றாக கழுவி வெட்டி வைக்கவும். அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயம், தக்காளியை நீளமாக நறுக்கி வைக்கவும்.
  2. அடுப்பில் குக்கரை வைத்து நல்லெண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும்.
  3. பிறகு வெங்காயம், கறிவேப்பில்லை போட்டு வதக்கவும். நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.
  4. பிறகு ஊற வைத்த சிக்கனை சேர்த்து வதக்கவும். அதனுடன் உப்பு மற்றும் அணைத்து மசாலா பொடிகளை போட்டு வதக்கவும்.
  5. 5 - 10 நிமிடம் வரை நன்றாக கிளறவும். பிறகு 50 ml தண்ணீர் மற்றும் நறுக்கிய தக்காளி சேர்த்து கிளறி விட்டு மூடி போட்டு வெயிட் வைக்கவும்.
  6. 2 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும். ஆவி அடங்கியதும் மூடியை திறந்து மறுபடி அடுப்பை ஆன் செய்யவும்.
  7. கொதி வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து தேங்காய் பாலை சேர்க்கவும். ரொம்ப கெட்டியாக இருந்தால் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். நன்றாக கிளறி கொதிக்க விட்டு 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.
  8. கொத்தமல்லி தழையை சேர்க்கவும். சுவையான சிக்கன் குழம்பு ரெடி. இது சாதம், பரோட்டா, சப்பாத்தி, ஆப்பம், இட்லி, தோசை அணைத்துக்கும் நன்றாக இருக்கும்.

Wednesday, July 8, 2015

கேரட் ஜூஸ் / Carrot Juice


பரிமாறும் அளவு - 2

தேவையான பொருட்கள் -
  1. கேரட் - 4
  2. லெமன் - 1/2
  3. சர்க்கரை - தேவைக்கேற்ப   
செய்முறை -
  1. கேரட்டை தோல் சீவி சிறிதாக நறுக்கி கொள்ளவும்.
  2. மிக்சியில் நறுக்கிய கேரட் மற்றும் 3/4 கப் குளிர்ந்த தண்ணீர் ஊற்றி அரைக்கவும். அதை வடிகட்டி கொள்ளவும். மறுபடி ஒரு 1/2 கப் குளிர்ந்த தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டவும்.
  3. வடிகட்டிய ஜூஸில் லெமனை பிழியவும். தேவைக்கு ஏற்றபடி சர்க்கரை சேர்த்து  நன்றாக கலக்கவும்.
  4. கேரட் ஜூஸ் ரெடி. கிளாசில் ஊற்றி பரிமாறவும்.

Sunday, July 5, 2015

வடகம் குழம்பு / Vadagam Curry

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. வறுத்த வெங்காய வடகம் - 6
  2. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  3. புளி - நெல்லிக்காய் அளவு 
  4. உப்பு - தேவையான அளவு 
வறுத்து அரைக்க -
  1. மிளகாய் வத்தல் - 3
  2. கொத்தமல்லி - 3 மேஜைக்கரண்டி 
  3. சீரகம் - 1 மேஜைக்கரண்டி 
  4. மிளகு - 1/2 தேக்கரண்டி 
  5. கறிவேப்பிலை - சிறிது 
தாளிக்க -
  1. நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. வெந்தயம் - 1/2 தேக்கரண்டி 
  5. சின்ன வெங்காயம் - 4
  6. கறிவேப்பிலை - சிறிது 
அரைக்க -
  1. தேங்காய் துருவல் - 5 மேஜைக்கரண்டி 
செய்முறை -
  1. புளியை 100 மில்லி தண்ணீரில் ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கி வைக்கவும்.
  2. அடுப்பில் வெறும் கடாயை வைத்து சூடானதும் மிளகாய் வத்தல், கொத்தமல்லி, மிளகு எல்லாவற்றையும் போட்டு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து நன்கு வறுத்து அடுப்பை அணைக்கவும். அதனுடன் சீரகம், கறிவேப்பிலை இரண்டையும் சேர்த்து கிளறி சிறிது நேரம் ஆற விடவும். 
  3. நன்கு ஆறியதும் மிக்ஸ்சியில் பொடி பண்ணிக் கொள்ளவும். தேங்காய் துருவலை தனியாக மிக்ஸ்சியில் அரைத்து எடுத்து வைக்கவும்.
  4. அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயத்தை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும்.
  5. வெங்காயம் பொன்னிறமானதும் வெந்தயம், புளித்தண்ணீர், மஞ்சள் பொடி, உப்பு, திரித்து வைத்துள்ள பொடி மேலும் ஒரு கப் (200 மில்லி) தண்ணீர் சேர்த்து மசாலா வாடை போகும் வரை நன்கு கொதிக்க விடவும். வடகத்தில் உப்பு இருப்பதால் தேவைக்கு ஏற்ற படி சேர்த்துக் கொள்ளவும்.
  6. மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
  7. இறுதியில் வறுத்த வெங்காய வடகத்தை சேர்த்து அடுப்பை அணைக்கவும். பிறகு பாத்திரத்திற்கு மாற்றி விடவும். சுவையான வெங்காய வடக குழம்பு ரெடி.

Wednesday, July 1, 2015

ஸ்ட்ராபெரி மில்க் ஷேக் / Strawberry Milkshake


பரிமாறும் அளவு - 2

தேவையான பொருட்கள் -
  1. ஸ்ட்ராபெரி - 8 - 10
  2. குளிர்ந்த பால் - 1 கிளாஸ்
  3. வெண்ணிலா ஐஸ்கிரீம் - 3 ஸ்கூப்
  4. சர்க்கரை - 2 மேஜைக்கரண்டி
செய்முறை -
  1. ஸ்ட்ராபெரியை நன்றாக கழுவி இலையை கட் செய்து நீக்கி விடவும். பிறகு ஸ்ட்ராபெரியை சிறிய துண்டுகளாக கட் செய்து கொள்ளவும்.
  2. மிக்சியில் ஸ்ட்ராபெரி, பால், ஐஸ்கிரீம், சர்க்கரை அனைத்தையும் சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும்.
  3. ஸ்ட்ராபெரி மில்க் ஷேக் ரெடி. கிளாஸில் ஊற்றி பரிமாறவும். குழந்தைகளுக்கு கிரீம் மேலே வைத்து கொடுக்கலாம்.
Related Posts Plugin for WordPress, Blogger...