Thursday, October 29, 2015

ஆம வடை / பருப்பு வடை / Ama Vadai / Paruppu Vadai


தேவையான பொருள்கள் -
  1. கடலைப்பருப்பு - 100 கிராம் 
  2. காயத்தூள் - சிறிது 
  3. பெரிய வெங்காயம் - 1
  4. பச்சை மிளகாய் - 1
  5. கறிவேப்பிலை - சிறிது 
  6. மல்லித்தழை - சிறிது 
  7. உப்பு - தேவையான அளவு 
  8. பொரிப்பதற்கு எண்ணெய் - தேவையான அளவு 
செய்முறை -
  1. கடலைப்பருப்பை 3 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். 
  2. ஊறிய பிறகு அதிலுள்ள தண்ணீரை  நன்கு வடித்து விட்டு 4 மேஜைக்கரண்டி அளவு முழு பருப்பை தனியே எடுத்து வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை எல்லாவற்றையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.
  3. மீதமுள்ள பருப்புடன்  காயத்தூள், உப்பு  சேர்த்து மிக்ஸ்சியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். 
  4. அரைத்து வைத்துள்ள பருப்புடன் முழு பருப்பு, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை எல்லாவற்றையும் சேர்த்து நன்கு பிசைந்து வைக்கவும்.
  5. எலுமிச்சை அளவு மாவை கையில் எடுத்து வடைகளாக தட்டி பிளாஸ்டிக் பேப்பரில் வைக்கவும்.
  6. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான சூட்டில் வைத்து நான்கு வடைகளை போடவும். ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பி போடவும். 
  7. இரு புறமும் நன்கு வெந்ததும் எடுத்து ஒரு டிஸ்யு பேப்பரில் வைக்கவும். எண்ணெய் உறிஞ்சியவுடன் டீயுடன் பரிமாறவும். இந்த அளவுக்கு 8 வடைகள் வரும்.

Sunday, October 25, 2015

பாகற்காய் மசாலா / Bittergourd Masala

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பாகற்காய் - 2
  2. தக்காளி - 1
  3. மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி 
  4. மல்லித்தூள் - 1 மேஜைக்கரண்டி 
  5. சீரகத்தூள் - 1 தேக்கரண்டி 
  6. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  7. மல்லித்தழை - சிறிது 
  8. உப்பு - தேவையான அளவு 
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. பெரிய வெங்காயம் -1
  4. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. பாகற்காய், வெங்காயம், தக்காளி மூன்றையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்.
  4. பிறகு அதனுடன் பாகற்காய் துண்டுகளை போட்டு ஒரு  நிமிடம் கிளறி அதோடு 1/2 தம்ளர் தண்ணீரும், உப்பும் சேர்த்து கொதிக்க விடவும். 
  5. கொதிக்க ஆரம்பித்ததும் மூடி போட்டு 10 நிமிடம் அல்லது தண்ணீர் வற்றும் வரை வேகவிடவும்.
  6. தண்ணீர் நன்கு வற்றியதும் மல்லித்தழை தூவி அடுப்பை அணைக்கவும். சுவையான பாகற்காய் மசாலா ரெடி.

Wednesday, October 21, 2015

சரஸ்வதி பூஜை / Sarawathi Pooja


தசராவின் ஒன்பதாவது நாளான இன்று சரஸ்வதி பூஜை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சரஸ்வதி பூஜை அன்று வீடுகளிலும், அலுவலங்களிலும் பூஜைகள் செய்து அன்னை சரஸ்வதியை வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளோம்.

சரஸ்வதியை வழிபடுவதற்கு முன்பு பூஜை செய்யும் இடத்தை நன்கு சுத்தப்படுத்த வேண்டும். சரஸ்வதியின் படத்தையும் சுத்தப்படுத்தி சந்தணம், குங்குமம் வைத்து பூக்களால் அலங்கரிக்க வேண்டும்.

அன்னை சரஸ்வதியின் பார்வையில் புத்தகங்களை வைத்து அதன் முன் வாழை இலையை விரித்து சரஸ்வதிக்கு பிடித்தமான சர்க்கரைப்பொங்கல், பூம்பருப்பு, புளியோதரை வைத்து அன்னையை வழிபட வேண்டும்.

தசரா எங்கள் ஊரில் மிகவும் பிரபலமான பண்டிகை ஆகும். இங்கு 12 அம்மன் கோவில்கள் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு பூஜையும் நடக்கும். சில வீடுகளில் கொலு வைத்திருப்பார்கள்.
கொலு பார்க்க வருபவர்களுக்கு சுண்டல் வகைகள், சர்க்கரைப்பொங்கல் கொடுத்து மகிழ்வார்கள். 10 நாட்களும் கோவில்களில்  பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.

சரஸ்வதி பூஜை அன்று எல்லா அம்மனுக்கும் வெள்ளை நிற ஆடையில் அலங்காரம் செய்திருப்பார்கள். 23 ஆம் தேதி மாலையில் 12 சப்பரங்களும் பாளையங்கோட்டை மார்க்கெட் மைதானத்தில் வந்து நிற்கும். குழந்தைகளை மகிழ்விக்க ராட்டினங்கள், கடை வீதிகள் எல்லாம் இருக்கும்.
நாமும் சரஸ்வதி பூஜையை சிறப்பாக கொண்டாடுவோம். உங்கள் அணைவருக்கும் என்னுடைய சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள் !!

நன்றி
சாரதா 

Thursday, October 15, 2015

புடலைங்காய் வறுவல் / Snake Gourd Fry


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. புடலைங்காய் - 400 கிராம் 
  2. கடலை மாவு - 3 மேஜைக்கரண்டி 
  3. சோள மாவு - 2 மேஜைக்கரண்டி 
  4. மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி 
  5. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  6. உப்பு - தேவையான அளவு 
  7. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. புடைலங்காயின் தோலை சீவி அதன் உள்ளே இருக்கும் வெள்ளையான பகுதியை எடுத்து விட்டு நீளவாக்கில் வெட்டி வைக்கவும். பிறகு அதன் மேல் கடலை மாவு, சோளமாவு, மிளகாய் தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து எல்லா இடங்களிலும் படும் படி நன்றாக கலந்து 15 நிமிடம் ஊற வைக்கவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான சூட்டில் வெட்டி வைத்துள்ள புடலைங்காய் துண்டுகளை கடாய் கொள்ளும் அளவுக்கு போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.
  3. மீதமுள்ள எல்லா புடலைங்காய் துண்டுகளையும் இதே முறையில் பொரித்து எடுத்து டிஸ்யு பேப்பரில் வைக்கவும். எண்ணெய் உறிஞ்சியவுடன் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
  4. கடாயில் உள்ள அதே எண்ணெயில் கறிவேப்பிலையை போட்டு பொரித்து வறுத்து வைத்துள்ள புடலைங்காயின் மேல் தூவி விடவும். சுவையான புடலைங்காய் வறுவல் ரெடி.

Sunday, October 11, 2015

பீட்ரூட் பொரியல் / Beetroot Poriyal


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பீட்ரூட் - 150 கிராம் 
  2. பாசிப்பருப்பு - 2 மேஜைக்கரண்டி 
  3. தேங்காய் துருவல் - 2 மேஜைக்கரண்டி 
  4. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  5. உப்பு - தேவையான அளவு 
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. சின்ன வெங்காயம் - 10
  4. பச்சை மிளகாய் - 2
  5. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. அடுப்பில் ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும்.
  2. பீட்ரூட்டை நன்றாக கழுவி தோல் சீவி துருவியில் வைத்து துருவிக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  4. வெங்காயம் பொன்னிறமானதும் துருவி வைத்துள்ள பீட்ரூட், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேகும் வரை நன்றாக கிளறி விடவும்.
  5. நன்கு வெந்ததும் அவித்து வைத்துள்ள பாசிப்பருப்பு, தேங்காய் துருவல் இரண்டையும் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். சுவையான பீட்ரூட் பொரியல் ரெடி.

Monday, October 5, 2015

பாசிப்பருப்பு பாயசம் / Moong Dal Payasam

பரிமாறும் அளவு - 3 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பாசிப்பருப்பு - 100 கிராம் 
  2. அச்சுவெல்லம் - 5
  3. தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி 
  4. நெய் - 5 மேஜைக்கரண்டி 
  5. முந்திரிப்பருப்பு - 5
  6. காய்ந்த திராட்சை - 5
  7. ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி 
செய்முறை -
  1. அடுப்பில் கடாயை வைத்து ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் மிதமான சூட்டில் வைத்து முந்திரிப்பருப்பு, காய்ந்த திராட்சை இரண்டையும் வறுத்து தனியே வைக்கவும்.
  2. அதே கடாயில் தேங்காய் துருவலை பொன்னிறமாக வறுத்து தனியே வைக்கவும்.
  3. அதே கடாயில் பாசிப்பருப்பை வாசம் வரும் வரை வறுக்கவும்.
  4. அடுப்பில் குக்கரை வைத்து அதில் பாசிப்பருப்பு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும். நீராவி வந்ததும் வெயிட் போட்டு 4 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
  5. நீராவி அடங்கியதும் மூடியை திறந்து பருப்பை எடுத்து நன்கு மசித்து வைக்கவும்.
  6. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் அச்சு வெல்லத்துடன் 50 மில்லி தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். அச்சு வெல்லம் கரைந்தவுடன் வடிகட்டி மீண்டும் அதே பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
  7. கொதிக்க ஆரம்பித்தவுடன் மசித்து வைத்திருக்கும் பாசிப்பருப்பை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
  8. இறுதியில் வறுத்து வைத்துள்ள தேங்காய் துருவல், முந்திரிப்பருப்பு, காய்ந்த திராட்சை, ஏலக்காய் தூள், மீதமுள்ள நெய் எல்லாவற்றையும் கலந்து நன்றாக கிளறி அடுப்பை அணைக்கவும். கிளாசில் ஊற்றி பரிமாறவும். சுவையான பாசிப்பருப்பு பாயசம் ரெடி.
Related Posts Plugin for WordPress, Blogger...