Wednesday, June 18, 2014

ஹோட்டல் எம்டி சால்னா / Hotel Empty Salna

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பெரிய வெங்காயம் - 1
  2. தக்காளி - 1
  3. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  4. சிக்கன் மசாலா - 1/2 தேக்கரண்டி 
  5. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 
  6. உப்பு - தேவையான அளவு
  7. மல்லித்தழை - சிறிது                                
வறுத்து அரைக்க -
  1. மிளகாய் வத்தல் - 2
  2. கொத்தமல்லி - 2 மேஜைக்கரண்டி 
  3. பெருஞ்சீரகம் - 1/2 தேக்கரண்டி 
  4. மிளகு - 1/2 தேக்கரண்டி 
  5. பட்டை - 1/2 இன்ச் அளவு 
  6. கிராம்பு - 1                                              
அரைக்க -
  1. தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி 
  2. பொட்டுக்கடலை - 1 மேஜைக்கரண்டி 
  3. முந்திரிப்பருப்பு - 4
  4. கசகசா - 1/2 தேக்கரண்டி                       
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. பட்டை - 1/4 இன்ச் அளவு 
  3. கிராம்பு - 1
  4. வெங்காயம் - 1/4 பங்கு 
  5. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும். தாளிப்பதற்கு தேவையான கால் பங்கு வெங்காயத்தையும் நறுக்கி வைக்கவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் வத்தல், கொத்தமல்லி, பெருஞ்சீரகம், மிளகு, பட்டை, கிராம்பு  எல்லாவற்றையும் போட்டு ஒரு நிமிடம் வறுத்து அடுப்பை அணைக்கவும். ஆறிய  பின் மிக்ஸ்சியில் திரித்துக் கொள்ளவும். 

  3. அதே கடாயில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளியை சேர்த்து சுருண்டு வரும் வரை வதக்கி சிறிது நேரம் ஆற விடவும். ஆறிய பின் மிக்ஸ்சியில் கொஞ்சம் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.                                                             

  4. தேங்காய் துருவல், பொட்டுக் கடலை, முந்திரிப்பருப்பு, கசகசா எல்லாவற்றையும்  மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.                           
  5. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போடவும். பட்டை பொன்னிறமானதும் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். 
  6. வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.
  7. பிறகு திரித்து வைத்துள்ள மசாலா பொடி, உப்பு, சிக்கன் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து அதோடு ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.                        
  8. மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். 
  9. பிறகு அரைத்த தேங்காய் கலவையை சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விடவும்.
  10. மல்லித் தழையை தூவி அடுப்பை அணைக்கவும். சுவையான எம்டி சால்னா ரெடி. எம்டி சால்னா பரோட்டா, பூரி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடலாம்.
குறிப்புக்கள்  -
  1. தேங்காய் கலவையில் பொட்டுக்கடலை சேர்த்திருப்பதால் அதிக நேரம் கொதிக்க வைக்க கூடாது.
  2. வறுத்து பொடி செய்வதற்கு பதிலாக மிளகாய்த்தூள், மல்லித்தூள், மிளகுத்தூள், பட்டை, கிராம்புத்தூள் சேர்த்தும் செய்யலாம்.

4 comments:

  1. சூப்பர். சிறு வயதில் சென்னை பீடர்ஸ் ரோட் சத்யம் தியேடர் அருகே இருந்த பரோட்டா கடையில் டஜன் கணக்கில் உள்ளே தள்ளிய பரோட்டா சாப்ஸ் சால்னா நினைவுக்கு வருது.

    ReplyDelete
  2. மிகவும் நன்றாக உள்ளது

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...