Tuesday, May 12, 2015

அவல் பாயாசம் / Aval payasam


பரிமாறும்  அளவு - 3 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. அவல் - 200 கிராம்
  2. ஜவ்வரிசி - 100 கிராம்
  3. காய்ச்சிய பால் - 1/4 லிட்டர் 
  4. அச்சு வெல்லம் - 400 கிராம் 
  5. முந்திரிப்பருப்பு - 10
  6. காய்ந்த திராட்சை - 10
  7. நெய் - 50 கிராம்                                           
செய்முறை -
  1. அவல், ஜவ்வரிசி இரண்டையும் நன்றாக கழுவி  தனித் தனியாக ஒரு தம்ளர் (200 மில்லி) தண்ணீரில் 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.                                         
  2. கடாயில் ஒரு மேஜைக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் முந்திரி பருப்பு, திராட்சையை போட்டு பொன்னிறமாக வறுத்து தனியே வைக்கவும்.   
  3. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் அச்சு வெல்லத்துடன் 50 மில்லி தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சி வடி கட்டி வைத்துக் கொள்ளவும்.                
  4. அதே வாயகன்ற பாத்திரத்தில் ஊறிய ஜவ்வரிசி மற்றும் அதிலுள்ள தண்ணீரையும்  சேர்த்து 10 நிமிடம் வரை  வேக விடவும்.                     
  5. ஜவ்வரிசி வெந்ததும் அதனுடன் ஊற வைத்த அவலும் அதில் உள்ள தண்ணீரையும் சேர்த்து 10 நிமிடம் வேக விடவும்.                                                                                                              
  6. அவல் வெந்த்ததும் சர்க்கரைப் பாகை ஊற்றவும்.                      
  7.  பாகு சேர்த்து வரும் போது காய்ச்சிய பால், முந்திரி திராட்சை, ஏலக்காய் தூள், நெய் எல்லாவற்றையும் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். 
                                                               
  8. சுவையான அவல் பாயாசம் ரெடி. ஜவ்வரிசி சேர்க்காமல் தனி அவலை வைத்தும் அவல் பாயாசம் செய்யலாம்.

Sunday, May 10, 2015

அன்னையர் தினம் / Mother's Day


உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்னையர் தின வாழ்த்துக்கள் ! இன்று மே 10  ஆம் தேதி அன்னையர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.


இந்த பூமியில் நானும்  அவதாரம் எடுக்க
துணையாக  இருந்தவளே !

பத்து மாதங்கள்  என்னை
கருவறையில் சுமந்தவளே !

பசியால் நீ வாடும் பொழுதும்
நான் பசி அறியாமல் செய்தவளே !

உன்னை நான் என்னவென்று சொல்வேன்
நீ தெய்வம் என்று சொன்னால் கூட தகும் !

நீ தெய்வத்துக்கும்  மேலேதான் என் மனதில் !

தாயிற் சிறந்த கோவிலுமில்லை என்ற வரிகளுக்கு ஏற்ற படி ஒரு பெண் சகோதரியாக, தாரமாக, மகளாக, தோழியாக, பாட்டியாக என்று எத்தனையோ பாத்திரங்களில் வலம் வந்தாலும் அன்னை என்ற பாத்திரம் தான் முதல் இடத்தை வகிக்கிறது.

எனவே இந்த அன்னையர் தின நன்னாளில் அனைவரும் அன்னையை போற்றி வணங்குவோம் !

நன்றி
சாரதா 

Friday, May 8, 2015

தக்காளி கூட்டு / Tomato Curry


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. தக்காளி - 5
  2. சாம்பார் பொடி - 1 மேஜைக்கரண்டி 
  3. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  4. உப்பு - தேவையான அளவு 
                                                                                    
அரைக்க -
  1. தேங்காய் துருவல் - 50 கிராம் 
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. பெரிய வெங்காயம் - 1
  5. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. தக்காளி, வெங்காயம் இரண்டையும் பொடிதாக வெட்டி வைக்கவும். தேங்காயை மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
                                                                       
  2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
                                                                           
  4. தக்காளி நன்கு மசிந்ததும் அதனுடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து கிளறவும் .
                                                                         
  5. மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்க்கவும். 
                                                                                   
  6. கூட்டு  கெட்டியானதும் அடுப்பை அணைத்து விட்டு பாத்திரத்திற்கு மாற்றி விடவும். சுவையான தக்காளி கூட்டு ரெடி. பூரி, சப்பாத்தி, சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

Monday, May 4, 2015

மாவத்தல் / Mavathal


இப்போது மாங்காய் சீசன் ஆரம்பமாகி விட்டது. மாங்காயை வைத்து ஒரு வருடத்திற்கு தேவையான மாவத்தல் செய்து வைத்துக் கொள்ளலாம். மாவத்தலை வைத்து குழம்பு செய்தால் நல்ல மணமாகவும் சுவையாகவும் இருக்கும். இனி மாவத்தல் எப்படி செய்வதென்று பார்ப்போமா !

தேவையான பொருள்கள் -
  1. மாங்காய் - 7
  2. உப்பு - 125 கிராம் 
செய்முறை -
  1. மாங்காய்களை நன்கு கழுவி ஈரம் போக ஒரு துணியால் நன்கு துடைக்கவும்.
  2. பிறகு எல்லா மாங்காய்களையும் நீள வாக்கில் வெட்டிக் கொள்ளவும். கொட்டைகளை சேர்க்க வேண்டாம்.                                                                            
  3. ஒரு வாயகன்ற பிளாஸ்டிக் பாத்திரத்தில் மாங்காய் துண்டுகள் மற்றும் உப்பு சேர்த்து ஒரு நாள் முழுவதும் ஊற விடவும். இடை இடையே நன்கு குலுக்கி விடவும். சிறிது தண்ணீர் விடும்.     
  4. மறு நாள் மாங்காய் துண்டுகளை எடுத்து ஒரு தாம்பாளத்தில் பரப்பி வெயிலில் காய வைக்கவும். அந்த உப்பு தண்ணீரை வீணாக்காமல் மூடி வைக்கவும்.                                  
  5. காய்ந்தவுடன் மாங்காய் துண்டுகளை மறுபடி உப்புத் தண்ணீரில் போடவும்.
  6.  மறுநாள் எடுத்து மீண்டும் வெயிலில் காய வைக்கவும்.  உப்புத் தண்ணீர் வற்றும் வரை இதே முறையில் செய்யவும். உப்புத் தண்ணீர் வற்ற மூன்று நாட்கள் வரை ஆகும்.
  7. எனவே மூன்று நாட்கள் வரை இதே முறையில் செய்யவும்.
  8. நன்கு காய்ந்தவுடன் ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு மூடி வைக்கவும்.
  9. இந்த அளவுக்கு 60 மாவத்தல் வரும். மாவத்தல் குழம்பு ரெசிபி பார்க்க இங்கே கிளிக் பண்ணவும். 

Thursday, April 30, 2015

கொத்து பரோட்டா / Kothu Parotta


தேவையான பொருட்கள் -
  1. பரோட்டா - 6
  2. முட்டை - 3
  3. சால்னா - 1 கப் 
  4. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
  5. வெங்காயம் - 1
  6. தக்காளி - 1
  7. மிளகாய் - 2
  8. உப்பு - தேவையான அளவு
  9. கொத்தமல்லி பொடி - 1 மேஜைக்கரண்டி
  10. மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி
  11. மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
  12. கறிவேப்பிலை - சிறிது 
  13. கொத்தமல்லி தழை - சிறிது 

செய்முறை -
  1. பரோட்டாக்களை பிய்த்து வைக்கவும். தக்காளி, வெங்காயம் இரண்டையும்  பொடிதாக நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
  3. வெங்காயம் வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  4. தக்காளி வதங்கியதும் மிளகாய் பொடி, கொத்தமல்லி பொடி, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து வதக்கவும்.
  5. பிறகு அதனுடன் பிய்த்து வைத்துள்ள பரோட்டா துண்டுகளை சேர்த்து கிளறவும்.
  6. பிறகு அதன் மேல் சால்னாவை ஊற்றி எல்லா இடங்களிலும் படும் படி நன்கு கிளறவும்.
  7.  பிறகு அதன் மேல் முட்டைகளை உடைத்து ஊற்றி 5 - 10 நிமிடம் வரை நன்கு கிளறி கொத்தி விடவும்.
  8. இறுதியில் மல்லித்தழை மற்றும் கறிவேப்பிலை தூவி நன்கு கிளறி அடுப்பை அணைக்கவும். சுவையான கொத்து பரோட்டா ரெடி.
  9. சால்னாக்கு பதிலாக முட்டை குருமா அல்லது சிக்கன் குழம்பு அல்லது வெஜ் குருமா போன்றவற்றை உபயோகபடுத்தலாம்.

Tuesday, April 28, 2015

ஈஸி இட்லி சாம்பார் / Easy Idli Sambar

இந்த இட்லி சாம்பாரை எளிதில் செய்து விடலாம் ஏனெனில் பருப்பை வேக வைக்க தேவையில்லை. வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு உடனே செய்து அசத்தி விடலாம். எனவே நீங்களும் நான் கொடுத்துள்ள குறிப்பின்படி செய்து அசத்துங்க !!

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. துவரம்பருப்பு - 25 கிராம் 
  2. பாசிப்பருப்பு - 25 கிராம் 
  3. கடலைப்பருப்பு - 25 கிராம் 
  4. தக்காளி - 1
  5. பச்சை மிளகாய் - 1
  6. சின்ன வெங்காயம் - 4
  7. ஆச்சி சாம்பார் பொடி - 1 மேஜைக்கரண்டி 
  8. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி 
  9. காயத்தூள் - 1/4 தேக்கரண்டி 
  10. மல்லித்தழை - சிறிது 
  11. உப்பு - தேவையான அளவு
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. சின்ன வெங்காயம் - 4
  5. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு மூன்றையும் போட்டு நன்கு வறுத்து சிறிது நேரம் ஆறவிடவும்.
  2. ஆறிய பிறகு மிக்ஸ்சியில் திரித்துக் கொள்ளவும்.
  3. திரித்து வைத்துள்ள பொடியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.
  4. தக்காளியை பொடிதாகவும், வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் நீளவாக்கிலும் வெட்டி வைக்கவும்.
  5. அடுப்பில் அதே கடாயை வைத்து 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் முழு வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.
  6. தக்காளி நன்கு வதங்கியதும் அதனுடன் ஆச்சி சாம்பார் பொடி, மஞ்சள் தூள், காயத்தூள் சேர்த்து கிளறவும். பிறகு உப்பு, 300 மில்லி தண்ணீர் சேர்த்து மசாலா வாடை போகும் வரை நன்கு கொதிக்க விடவும்.
  7. பிறகு கலக்கி வைத்துள்ள பொடியை சேர்த்து மல்லித்தழையும் சேர்த்து அடுப்பை அணைக்கவும். பொடியை சேர்த்து கொதிக்க வைக்க கூடாது. பிறகு சாம்பாரை பாத்திரத்திற்கு மாற்றி விடவும்.
  8. அடுப்பில் கடாயை வைத்து மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  9. வெங்காயம் பொன்னிறமானதும் எடுத்து குழம்பில் ஊற்றி நன்றாக கலக்கி விடவும். சுவையான இட்லி சாம்பார் ரெடி.
குறிப்புகள் -
  1. மூன்று வகையான பருப்புகளை சம அளவு எடுத்து வறுத்து மிக்ஸ்சியில் திரித்து வைத்துக் கொண்டால் தேவைப்படும் போது உபயோகபடுத்தலாம்.

Friday, April 24, 2015

சீனி அவரைக்காய் / கொத்தவரங்காய் பொரியல் / Cluster Beans Poriyal


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. சீனி அவரைக்காய் - 100 கிராம் 
  2. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  3. உப்பு - தேவையான அளவு     
  4. தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி                     
கரகரப்பாக அரைக்க -
  1. மிளகாய் வத்தல் - 2
  2. சீரகம் - 1 தேக்கரண்டி   
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி  
  3. உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. பெரிய வெங்காயம் - 1
  5. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. சீனி அவரைக்காய், வெங்காயம் இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.
                                                                               
  2. ஒரு வாயகன்ற பாத்திரத்தில்  சீனி அவரைக்காய் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அதனுடன் உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
                                                                
  3. நன்கு வெந்தவுடன் அதிலுள்ள தண்ணீரை வடித்து விடவும்.   
  4. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு  போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
                                                                                
  5. வெங்காயம் நல்ல பொன்னிறமானதும் கரகரப்பாக அரைத்து வைத்துள்ள  மிளகாய் வத்தல், சீரக கலவையை சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்.
                                                                              
  6. பிறகு அதனுடன் அவித்து வைத்துள்ள சீனி அவரைக்காய், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறவும். உப்பு தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக் கொள்ளவும். 
  7. இறுதியில் தேங்காய் துருவலை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். பிறகு பாத்திரத்திற்கு மாற்றி விடவும். சுவையான சீனி அவரைக்காய் பொரியல் ரெடி.                          
Related Posts Plugin for WordPress, Blogger...