Wednesday, June 18, 2014

இட்லி (தோல் உளுந்து) / Idly Using Black Urad dal

தேவையான பொருள்கள் -
  1. இட்லி அரிசி - 4 கப் 
  2. தோல் உளுந்து - 1 கப் 
  3. உப்பு - தேவையான அளவு                         
செய்முறை -
  1. அரிசியை நன்றாக கழுவி விட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நான்கு மணி நேரம் ஊற வைக்கவும். தோல் உளுந்தையும் கழுவி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.                                                             
  2. உளுந்து நன்றாக ஊறியதும் இரண்டு அல்லது மூன்று தடவை தண்ணீர் மாற்றி தோல் எடுத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வைக்கவும்.                              
  3. முதலில் பருப்பிலுள்ள தண்ணீரை வடித்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்துக் கொள்ளவும். பிறகு கிரைண்டரில்  பருப்பை போட்டு அரைக்கவும். 5 நிமிடத்திற்கு ஒரு தடவை இரண்டு கை அளவு தண்ணீர் தெளித்து மொத்தம் 20 நிமிடம் அரைக்கவும். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அரைத்தால் தான் மாவு நன்றாக பொங்கி வரும்.
  4. மாவு பொங்கிய பதம் வந்தவுடன் மாவை எடுத்து ஒரு பெரிய குத்துச்சட்டியில் வைக்கவும்.
  5. அடுத்தது அரிசியில் உள்ள தண்ணீரையும் வடித்து வைத்துக் கொள்ளவும். அரிசியை  கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.10 நிமிடம் கழித்து தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது சேர்த்து அரைக்கவும். 15 நிமிடங்களில் அரிசி அரைபட்டு விடும்.                                                             
  6. அரிசி நன்கு அரைபட்டதும் எடுத்து உளுந்து மாவோடு சேர்த்து வைக்கவும். பிறகு 150 மில்லி அளவு தண்ணீர் ஊற்றி கிரைண்டரை கழுவி அந்த தண்ணீரையும், உப்பும் மாவோடு சேர்த்து பிசையவும். 12 மணி நேரம் புளிக்க விடவும். அடுத்த நாள் காலையில் இதே போல் பொங்கி இருக்கும்.                                                                                                                       

  7. அடுப்பில் இட்லி கொப்பரையை வைத்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பொங்கிய மாவை ஒரு கரண்டியால் நன்றாக கலக்கி வைக்கவும்.
  8. இட்லித்தட்டில் துணியை போட்டு ஒரு குழிக்கரண்டி வீதம் மாவை எடுத்து ஊற்றி இட்லி கொப்பரையில் வைத்து மூடி வைக்கவும். இட்லி 10 நிமிடத்தில் வெந்துவிடும்.
  9. நன்கு வெந்தவுடன் எடுத்து துணியை சுற்றி தண்ணீர் தெளித்து இட்லிகளை எடுத்து ஹாட்பாக்ஸ்சில் வைக்கவும். மிருதுவான பூப்போன்ற இட்லி ரெடி.
முழு உளுந்தில் இட்லி செய்யும் முறைக்கு இங்கே கிளிக் பண்ணவும்.

குறிப்புக்கள்  -
  1. இந்த மாவில் தோசை, பணியாரம், ஊத்தாப்பம் செய்யலாம்.
  2. தோசை சுடுவதற்கு மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கி தோசைகளாக சுடவும்.
  3. பணியாரம், ஊத்தப்பம் இரண்டுக்கும் மாவு கெட்டியாக இருக்க வேண்டும்.

7 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...